ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது அதன் வேட்பாளர்களுக்கோ ஒருபோதும் ஆதரவளிக்காது எனவும், ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான கட்சிகளுடன் இணைந்து அமைக்கப்படும் முன்னணியில், மகிந்த – மைத்ரி ஆகியோர் ஒன்றாக வேட்பாளர் ஒருவரை நிறுத்தி, அவரின் வெற்றிக்காக உழைப்பார்கள் எனவும், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடனோ, மீண்டும் ரணில் விக்ரமசிங்கவுடனோ, மீண்டும் கருஜெயசூரியவுடனோ, மீண்டும் சஜித் பிரேமதாசவுடனோ அல்லது ஐக்கிய தேசிய சார்ந்த யாரோடும் ஒருபோதும் இணையப் போவதில்லை.
எங்கள் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ரணிலுக்கும் சஜித்துக்கும் கருவுக்கும்; எதிரான கட்சி.
இவர்களோடு ஒருபோதும் நாம் சேர மாட்டோம் என்பதை உங்களுக்கு சொல்ல விரும்புகின்றேன்.
அந்த பக்கத்திற்கு செல்வதற்கு ஒருவர் இருவர் இருப்பார்களே ஆனால், அது தொடர்பில் எமக்கு பிரச்சினை கிடையாது.
அவர்கள் செல்லாம். ஆனால் எமது கட்சி ஒருபோதும் இணையத் தயார் இல்லை.
என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக நாம் உருவாக்கியுள்ள தேசிய முன்னணி வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார் எனவும், அவரை வெல்ல வைப்பதற்கு மைத்ரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் செயற்படுவார்கள் எனவும், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸ்ஸாநாயக்க தெரிவித்தார்.
நாம் இன்று உருவாக்கியுள்ள, ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான தேசிய முன்னணி வேட்பாளர் ஒருவரை நியமிக்கும். அந்த வேட்பாளருடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து செயற்படும்.
அதேநேரம் மகிந்த ராஜபக்சவை போன்று தற்போதய நாட்டின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் இணைந்து கொள்வார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எதிர்ப்பார்த்த விடயங்கள் செய்ய முடியாது போனதற்கு ரணில் விக்கிரமசிங்க, கருஜெயசூரிய, ரவி கருணாநாயக்க, சஜித் பிரேமதாச போன்றவர்களே காரணமானவர்கள்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது சிந்தனைக்கு ஏற்ப இந்த அரசாங்கத்தினை கொண்டுசெல்ல முடியாமைக்கு இவர்கள்தான் காரணமாக இருந்தார்கள்.
பாரியளவில் கடல்போல் நிதியினை கொள்ளையிடும் அரசாங்கம் ஒன்றினை கொண்டு செல்லும் தேவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு இருக்கவில்லை.
அதேபோன்று இந்த நாட்டின் அரச திணைக்களங்களுக்கு சொந்தமான இடம் மற்றும் சொத்துக்களை தனியாருக்கு விற்கும் பைத்தியக்கார அரசாங்கம் ஒன்றினை முன்னெடுத்துச் செல்லும் வேலையை செய்ய வேண்டிய அவசியம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு இருக்கவில்லை.
எமது நாட்டை அமெரிக்காவின் ஆளுமைக்குள் கொண்டு வருவதற்கும் இங்கே அமெரிக்க இராணுவ முகாம்களை அமைப்பதற்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு நோக்கம் இருக்கவில்லை.
எனவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கத்திற்கு மீண்டும் ஒருமுறை செல்வதற்கான சாத்தியமே கிடையாது. என குறிப்பிட்டுள்ளார். (சி)