இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பின்னர், 9 இலட்சம் அகதிகளை மீள்குடியமர்த்தியுள்ளதாக, அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
தாய் நாட்டிற்கு வெளியே உள்ள மக்களுக்கான, மனிதாபிமான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அவுஸ்திரேலியா, ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்படும் அகதிகளையும், ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் உள்ள உறவினர்களால் பரிந்துரைக்கப்படும் அகதிகளையும், நாட்டுக்குள் அனுமதிக்கின்றது.
‘அகதிகள் பிரச்சினையின் சிக்கலை அவுஸ்திரேலியா அங்கீகரிக்கிறது.
இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண அவுஸ்திரேலிய சமூகம் மற்றும் ஐ.நா அகதிகள் ஆணையம் உள்ளிட்ட சர்வதேச தரப்புடன் இணைந்து அவுஸ்திரேலிய செயலாற்றுகிறது,’ என இந்தோனேசியாவில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், இந்தோனேசியாவில் ஐ.நா அகதிகள் ஆணையத்திடம் பதிந்துள்ள அகதிகளை ஏற்றுக் கொள்ளும் மனிதாபிமான திட்டம் தொடர்வதாக, அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அதேசமயம், அந்த அகதிகள் ஜூலை 1, 2014 முன்னதாக, இந்தோனேசியாவில் உள்ள ஐ.நா அகதிகள் ஆணையத்திடம் பதிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்துள்ளது.
இந்தியா, இலங்கை, மியான்மர், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, படகு வழியாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சிக்கும் அகதிகள் பெரும்பாலும், இந்தோனேசியா கரையில் ஒதுங்கும் சம்பவங்கள் பல நிகழ்ந்திருக்கின்றன.
இதை கருத்திற்கொண்டே, அவுஸ்திரேலியா இந்த முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை எனக் கூறப்படுகின்றது.
2013 முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் அவுஸ்திரேலிய அரசு, படகு வழியாக தஞ்சமடைபவர்களை நாடு கடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. (சி)