கடற்கரை பிரதேசங்களை தூய்மைப்படுத்தி பாதுகாப்பதுடன் அப்பிரதேசங்களை சுற்றுலாத்துறைக்கு ஏற்றதுபோல் அழகுபடுத்தும் சிரமதான வேலைத்திட்டம் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இன்று அம்பாறை அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரப் பிரதேசத்தில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று இராணுவமுகாமின் 241ஆம் படைப்பிரிவின் கட்டளை இடும் அதிகாரிகேணல் ஜானகவிமலரெட்ண தலைமையில் இடம்பெற்ற தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேசசெயலக நிர்வாக உத்தியோகத்தர் ஆ.சசீந்திரன், இராணுவ பொதுமக்கள் தொடர்பு அதிகாரி மேஜர் சந்திம ஜெயசேன, மேஜர் அனுரபுண்ணியசிறி, பி.ஏ.சஜீவ், கரையோரப் பேணல் மற்றும் கரையோர மூலவளத் திணைக்கள பொறியியலாளர் கே.எம்.றிபாஸ், கரையோரப் பேணல் உத்தியோகத்தர் கே.எஸ்.பாபுஜி மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசசெயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இராணுவத்தினர் உள்ளிட்ட பெருந்திரளான சமுர்த்தி பயனாளிகளும் கலந்துகொண்டனர்.
சிரமதானப்பணிகள் ஆரம்பமாகும் முன்னர் மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்த கேணல் ஜானகவிமலரெட்ண அழகான எமது நாட்டைச் சூழவுள்ள கடற்கரை பிரதேசங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் இதன் மூலம் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதன் நோக்கம் பற்றியும் தெளிவுபடுத்தினர்.
மேலும் இதன் மூலம் சுற்றுலாத்துறையின் வருமானத்தை அதிகரித்து நாட்டை வளம்பெறச் செய்வதுடன் எதிர்காலச் சந்ததிக்கு வளமுள்ள நாட்டை கையளித்துச் செல்லலாம் எனவும் குறிப்பிட்டார்.
இதன் பின்னர் ஆலையடிவேம்பு நாகதம்பிரான் ஆலயத்திற்கு முன்பாகவிருந்து ஒரு குழுவினரும் அதேபோல் சின்னமுகத்துவாரப் பாலத்திற்கு முன்பாக இருந்து ஒரு குழுவினரும் சிரமதானப் பணியில் இணைந்து கொண்டனர்.
சிரமதானப்பணியில் இணைந்து கொண்டவர்கள் கடற்கரை ஓரங்களில் வீசப்பட்டிருந்த போத்தல்கள் பிளாஸ்டிக் பைகள் சிரட்டைகள் குப்பைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அங்கிருந்த பற்றைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களையும் அகற்றினர்.
இதேவேளை இச்சிரமதானப்பணியில் இணைந்து கொண்டவர்களுக்கான தாகசாந்தியும் சிற்றுண்டிகளும் இராணுவத்தால் வழங்கப்பட்டன.
இதன் மூலம் சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் வரையிலான கடற்கரை பிரதேசம் இன்று தூய்மைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். (சி)