45ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகள் அனைத்திலும் அதிக பதக்கங்களைப் பெற்று அம்பாறை மாவட்டம் சம்பியனானது. இரண்டாமிடத்தை மட்டக்களப்பு மாவட்டம் பெற்றுக்கொண்டது.

கிழக்கு மாகாண விளையாட்டு விழா அட்டாளைச்சேனை அஸ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நிறைவடைந்தது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா தலைமையில் இன்று நடைபெற்ற இறுதிநாள் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலாள் டி சில்வா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.நசீர், எஸ்.எம். இஸ்மாயில் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங் அதிபர் வீ. ஜேகதீசன், பிரதேச செயலாளர்கள், அட்டாளைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா மற்றும் விளையாட்டு திணைக்களத்தின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

அனைத்து இனங்களினதும் கலை, கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் வகையிலான நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் குழு நிலைப் போட்டிகள் மற்றும் மைதானப் போட்டிகள் அனைத்திலும்  வெற்றி பெற்ற வீர, வீராங்களைகளுக்கான கிண்ணங்களையும், பதக்கங்களையும் அதிதிகள் வழங்கி வைத்தனர்.

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற வீர,வீராங்கனைகள் ஓக்டோபர் மாதம் பதுளையில் இடம்பெறவுள்ள 45ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.