ஒசாமா பின்லேடனின் மகன் கொல்லப்பட்டாரா?

அமெரிக்க இராணுவ தாக்குதலில் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடத்தின் மீதும், ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் அல்-கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் சுமார் 3 ஆயிரம் பேர் இறந்தனர்.

இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்-கொய்தா இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடனை அமெரிக்கா தீவிரமாக தேடிவந்தது. 10 ஆண்டுகள் தேடுதல் வேட்டைக்கு பிறகு பாகிஸ்தானில் அபோதாபாத்தில் பதுங்கி இருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படையினர் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதி சுட்டுக்கொன்றனர்.

அதன்பின்னர் ஒசாமா பின்லேடனின் 3 மனைவிகளும், அவர்களது மகன்களும் சவுதி அரேபியாவில் குடியேறினர். ஆனால் ஒசாமா பின்லேடனின் மகன்களில் ஒருவரான ஹம்சா பின்லேடன் தனது தந்தையின் தடத்தை பின்பற்றி அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்துக்கு திரும்பினார். இவர் அந்த இயக்கத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு ஹம்சா பின்லேடன் ஆடியோ பதிவு ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டார். அதில் தனது தந்தையை கொலை செய்ததற்கு பழி தீர்க்கும் வகையில் அமெரிக்காவில் தாக்குதல்கள் நடத்தும்படி பயங்கரவாதிகளுக்கு அவர் கட்டளையிட்டார்.

மேலும் அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்த ஹம்சா பின்லேடன் திட்டம் தீட்டிவருவதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ஹம்சா பின்லேடன் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என கடந்த பெப்ரவரி இறுதியில் அமெரிக்கா அறிவித்தது.

இந்த நிலையில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பை குறிவைத்து அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டார் என அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத உளவுத்துறை அதிகாரிகள் இந்த தகவலை கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், சி.என்.என். மற்றும் என்.பி.சி. ஆகிய ஊடகங்கள் முதலாவதாக இந்த செய்தியை வெளியிட்டன. அந்த செய்தியில், அல் கொய்தா மீது கடந்த 2 வருடங்களாக எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளில் 30 வயதான ஹம்சா பின்லேடன் உயிரிழந்துவிட்டார் என கூறப்பட்டு உள்ளது. எனினும் அவர் கொல்லப்பட்ட இடம், நாள் போன்ற வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக வெளியான செய்தி குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் கேட்டதற்கு, “இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்று கூறிவிட்டார். அதேபோல் அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனும், வெள்ளை மாளிகையும் இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!