மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம்

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் ஏற்பாட்டில், மாவட்டச் செயலக கேட்போர் கூட்டத்தில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில், அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

2019 ஆம் ஆண்டிற்கான முதலாவது மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில், பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

வீதி, போக்குவரத்து, மீன்பிடி, விவசாயம், சுகாதாரம், வீட்டுத்திட்டம் உள்ளடங்களாக பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், மன்னார் மாவட்டத்தில் அகழ்வு செய்யப்படுகின்ற மண், வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அதிக விலைக்கு விற்றல், சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு செய்தல் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதன் போது, அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன், சட்டவிரோத மண் அகழ்வு செய்யப்பட்டு வருவதாகவும், குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் குறிப்பிட்ட சிலருக்கே மண் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஒரு சிலர் இலாபம் அடைவதாகவும், மக்கள் பாதிப்படைவதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

எனவே மன்னார் மாவட்டத்தில் மண்ணுக்கு, நிர்ணய விலை ஒன்றை தீர்மானிக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் பல காணிகளை வனவள பாதுகாப்பு திணைக்களம் தன்வசப்படுத்தி வைத்துள்ளமையினால், மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதுடன், வீட்டுத்திட்டமும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டதுடன், பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், அழைக்கப்பட்ட திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், கடற்படை, பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு, தமது கருத்துக்களை முன்வைத்தனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!