ஐ.தே.க செயற்குழு கூடியது : முடிவு இல்லை

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை, கொழும்பு காலி முகத்திடலில் மிகப்பிரமாண்டமாக அறிவிக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஹெஷான் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம், இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இவ்வாறு குறிப்பிட்டார்.

‘எதிர்வரும் 5 ஆம் திகதி சுகததாஸ விளையாட்டரங்கில், ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு நடைபெறவுள்ளது.
எனினும், இங்கு 3 ஆயிரம் அளவான மக்களை மட்டுமே உள்வாங்க முடியும்.

நாம், அனைத்து பிரதேசங்களில் இருந்தும் மக்களை வரவழைக்கவே தீர்மானித்துள்ளோம். இதனால்தான், சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெறும் கட்சியின் மாநாட்டுக்கு பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஆனால், காலி முகத்திடலில் அனைவரையும் அழைத்து வந்து பாரிய மாநாடொன்றை நடத்த நாம் தீர்மானித்துள்ளோம்.

இங்கு வைத்து ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான விபரத்தையும் நாம் அறிவிப்போம். எமது புதியக் கூட்டணியின் தலைமைத்துவ அலுவலகம் சிறிகொத்தவில் இருக்க வேண்டும் என்றே அனைவரும் நினைக்கிறார்கள்.

இது தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இறுதித் தீர்மானங்களை நாம் விரைவில் எடுப்போம்.

ஸ்தாபிக்கப்படவுள்ள புதியக் கூட்டணியில் ஐக்கிய தேசியக் கட்சியினரே பெரும்பான்மையாக இருப்பார்கள்
எனவே, கட்சியும் கட்சி செயற்குழுவும் இந்த விடயங்களில் சரியான தீர்மானங்களை எடுக்கும் என்றே நாம் நம்புகிறோம்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் யார் என்பதை கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை என்பதையும் இங்கு கூறிக்கொள்கிறேன்.

அமைச்சர் சஜித் பிரேமதாஸ, உண்மையில் திறமையுள்ள அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவராவார். இவரை வேட்பாளராக களமிறக்குவது தொடர்பாக கட்சியின் உயர் பீடம்தான் தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

அதேநேரம், கூட்டணியின் தலைமைத்துவ சபையில் 11 பேர் நியமிக்கப்படவுள்ளனர். அதேபோல், செயலாளராக சஜித் பிரேமதாஸவின் பெயரும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், கூட்டணியின் யாப்பை இன்னும் நாங்கள் முழுமையாக ஆராயவில்லை. இதனை முழுமையாக ஆராய்ந்து, பின்னர் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றால், அதனையும் மேற்கொண்ட பின்னரே இந்த விடயத்தல் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்’. என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!