மட்டு, பட்டதாரிகளின் போராட்டம் முடிவு

பட்டதாரிகளுக்கு வழங்கப்படுகின்ற நியமனங்களின் போது, வெளிவாரிப் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட வெளிவாரிப் பட்டதாரிகளால், கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம், இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

வெளிவாரிப் பட்டதாரி குழுவினர், நேற்று பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு சென்று சந்திப்பை மேற்கொண்டு, தங்களின் போராட்டத்தின் கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

அதன் பின்னர், பட்டதாரிகளின் கோரிக்கைகள் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினரால், உரிய அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிபர் மட்டங்களில், தொலைபேசியூடாக கலந்துரையாடி, அவர்களின் வெளிப்படுத்தல்களை பட்டதாரிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, இவ்விடயங்கள் தொடர்பில், பட்டதாரிகளின் சத்தியாக்கிரகம் நடைபெறும் இடத்திற்கு சென்று, அனைத்துப் பட்டதாரிகள் முன்னிலையிலும் தெளிவுபடுத்துமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.

 

அந்த வேண்டுகோளின் அடிப்படையில், இன்று வெளிவாரிப் பட்டதாரிகளின் சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், பட்டதாரிகளின் நான்கு கோரிக்கைகள் தொடர்பிலும், அவை தொடர்பில் அவரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

அதன் பிரகாரம், பட்டதாரிகளின் கோரிக்கைகளில், நியமனத்தின் போது வெளிவாரிப் பட்டதாரிகள் உள்ளீர்க்கப்படாமை, ஒரு மனித உரிமை மீறல் செயற்பாடு. எனவே இது தொடர்பில் உயர் நீதிமன்றில் சட்டநடவடிக்கை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

இது தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் கலந்துரையாடி, பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தாரணி தவராஜா ஆகியோருடன் தொடர்பை ஏற்படுத்தி வழக்குத் தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அடுத்து, பட்டதாரிகளின் விபரங்கள் உரிய முறையில் செயற்படுத்தப்படல் வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில், பட்டதாரிகளுடன் இணைந்து அரசாங்க அதிபரூடாக மேற்படி நடைமுறையை செயற்படுத்தும் முகமாக, இன்றையதினம் கலந்துரையாடலொன்றை ஏற்படுத்திக் கொடுத்தார்.

பின்னர் எச்.என்.டி.ஏ மாணவர்களையும் பட்டதாரிகள் தரப்படுத்தலில் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில், உரிய அமைச்சின் அதிகாரியுடன் கலந்துரையாடி, அவ்வகையிலேயே உள்வாங்கப்பட்டுள்ள விடயத்தையும் தெளிவுபடுத்தினார். பட்டதாரிகளின் கோரிக்கைகள் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனால் மேற்கொள்ளப்பட்ட விடயங்களை ஏற்றுக் கொண்டு, தங்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை தற்காலிகமாக முடிவுறுத்துவதாக, பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!