குருணாகலில் பாரிய ஆர்ப்பாட்டம்

குருணாகல் வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு பிணை வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, குருணாகலில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

குருணாகல் நகரில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், அதிகளவான பொது மக்களும் குருணாகல் வைத்தியசாலை ஊழியர்களும் இணைந்து கொண்டனர்.

வைத்தியர் மொஹமட் ஷாபி மீது, பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில், அவர் அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அவரின் விடுதலையை கண்டித்து, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது, குருணாகலில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் அதிகவளான மக்கள் திரண்ட ஆர்ப்பாட்டமாக இது கருதப்படுகின்றது.

இதனால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக அறிய முடிகின்றது.

இதேவேளை, அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக, அஹிம்சை வழியிலான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதுடன், ஜனாதிபதி உட்பட அரசாங்கம் விரைவாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அரசாங்கம் 7 நாட்களில் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

‘அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தீவிரவாதிகளுடன் கடந்த காலங்களில் எவ்வாறான தொடர்புகளில் இருந்தார் என்பதற்கான, பல்வேறு தகவல்களை நாம் வெளியிட்டிருந்தோம்.

விசேடமாக காணிகளை வழங்கியது, அரச வாகனங்களை சஹ்ரான் உள்ளிட்ட தரப்பினருக்கு வழங்கியது என்பன தொடர்பான தகவல்களை நாம் ஆதாரத்துடன் வழங்கியிருந்தோம்.

எனினும், இதனை மைத்ரி- ரணில் அரசாங்கம் மூடி மறைத்து, மீண்டும் அவருக்கு ஒரு மாதத்தில் அமைச்சுப் பதவியை வழங்கியுள்ளது.

இது மக்களின் ஆணையையும் மனசாட்சியையும் ஜனநாயகத்தையும் மீறும் ஒரு செயற்பாடாகும்.

இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்ட இந்த அரசாங்கத்தை வெளியேற்ற, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

அந்தவகையில், எதிர்வரும் 7 நாட்களில் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்று நாம் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதற்காக நாம் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்’. என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அத்துரலிய ரத்ன தேரர் மேற்கொண்டு வந்த அனைத்து இனவாத திட்டங்களும் தோல்வியுற்றுள்ள நிலையில், மக்களை திசை திருப்பதற்போது முயற்சித்து வருகின்றார் என, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றம் சுமத்தியுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!