வீடமைப்புத் திட்டத்திற்கான நிதிகள் வழங்கப்படாமையை கண்டித்து, முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், இந்துபுரம் மற்றும் திருமுறிகண்டி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த வருடம் மார்கழி மாதம் 21 ஆம் திகதி இரவு பெய்த கடும் மழை காரணமாக, பல்வேறு பகுதிகளிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, விசேடமாக வீட்டுத் திட்டங்களை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக, சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான வீடமைப்பு திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது, வீடுகளுக்கான முதலாம் கட்ட கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு, மக்கள் வீட்டு வேலைகளை ஆரம்பித்து செய்த போதும், அடுத்த அடுத்த கட்ட நிதி வழங்கப்படவில்லை என்பது, முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.
அந்த வகையில், இவ்வாறு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள, முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, இந்துபுரம் மற்றும் திருமுறிகண்டி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின், முல்லைத்தீவு மாவட்ட காரியாலயம் முன்பாக, இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 8.00 மணியளவில், மாங்குளத்தில் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின், முல்லைத்தீவு மாவட்ட காரியாலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள், பல்வேறு பிரச்சிகைளை முன்வைத்தது, போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
அத்துடன், வீட்டுத் திட்டங்களுக்காக, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் சீமெந்து பைகள் வழங்கப்பட்டதாகவும், நிதி வழங்கப்படாத காரணத்தினால், சீமெந்து பைகள் பாவனைக்கு உதவாத வகையில் சென்றுள்ளதாகவும், மக்கள் கவலை வெளியிட்டனர்.
இதன் போது, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட கணக்காளர் சந்தித்து கலந்துரையாடினார்.
நிதி படிப்படியாகவே கிடைப்பதாகவும், அதனடிப்படையில் மக்களுக்கான நிதி வழங்கப்படும் எனவும், இரண்டு மூன்று மாத காலப்பகுதியில் வழங்குவதாகவும், கணக்காளர் குறிப்பிட்டார்.
இதற்கு, மக்கள் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டதுடன், வீடுகளை உடைத்துள்ள மக்கள் எதிர்வரும் மழை காலங்களில் பாதிக்கப்படுவார்கள் எனவும், கொழும்பு சென்றுள்ள மாவட்ட முகாமையாளர் வருகை தந்ததும், எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னர் உரிய பதில் வழங்க வேண்டும் எனவும், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், கணக்காளரும் எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னர் தீர்க்கமான முடிவை வழங்குவதாக அறிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்ட காரியாலயத்தை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், கலைந்து சென்றனர்.
இன்றைய போராட்டத்தின் போது, மாங்குளம் பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் பிரசன்னமாகியிருந்தனர். (சி)