வங்கியில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி மோசடி

அரச வங்கியில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி பல இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த நபர் தொடர்பில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றின் கிளையிலும், தீவக பகுதியில் உள்ள அரச வங்கி கிளையிலும் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி 8 பேருக்கு மேல் ஏமாற்றி பணத்தை மோசடி செய்த நபர் தொடர்பிலான தகவல்கள் கிடைக்க பெற்று உள்ளன எனவும், ஏமாற்றப்பட்டோர் அது தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொண்டால், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவிக்கையில், யாழ். மாநகர சபையில் பணியாற்றும் நபர் ஒருவர் 6 இளைஞர்கள் மற்றும் 2 யுவதிகளுக்கு அரச வங்கியில் வேலை வாய்ப்பினை பெற்று தருவதாக கூறி 4 இலட்சம் ரூபாய் முதல் 6 இலட்சம் ரூபாய் வரை கோரியுள்ளார்.

“வங்கியில் நியமன கடிதம் கிடைத்ததும், பணத்தை தருவதாக நாங்கள் 8 பேரும் கூறினோம்.

அதன் பிரகாரம் கடந்த 18 ஆம் திகதி கொழும்புக்கு அவர்களை அழைத்து 17 ஆம் திகதி திகதியிடப்பட்ட நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன. அன்றைய தினம் முதலே நீங்கள் வங்கியில் பணியாளராக இணைந்து உள்ளீர்கள் என கூறினார்.

நாங்களும் அதனை நம்பி மறுநாள் எமது நியமன கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த அரச வங்கியின் கிளைக்கு நியமன கடிதத்துடன் பணிக்கு சென்றோம்.

அங்கு எமது கடிதத்தை பார்த்த வங்கி முகாமையாளர் இது தமது வங்கியின் நியமன கடிதம் இல்லை எனவும் இது போலியானது எனவும் கூறிய போதே நாம் ஏமாற்றப்பட்டதை அறிந்தோம்.

அதன் பின்னர் எமக்கு வேலை வாய்ப்பைப் பெற்று தருவதாக கூறி பணத்தை பெற்ற நபருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட போது, தனக்கு அது பற்றி தெரியாது எனவும், தமக்கு வேறு நபரே வேலை வாய்ப்பு இருப்பதாக கூறியதன்படி அவரிடமே உங்களை அழைத்து சென்றேன். அவரிடம் தான் அது தொடர்பில் கேட்க வேண்டும் என கூறி தொலைபேசியை துண்டித்தார். அதன் பின்னர் அவரது தொலைபேசி இலக்கம் செயலிழந்து காணப்படுவதாக” பாதிக்கபட்ட ஒருவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Webadmin

error: Content is protected !!