அம்பாறை பொத்துவில் பிரதேச செயலகத்தின் சமுர்த்தி பிரிவினால் மதுபோதையில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியான குடும்பமாக வாழ்வோம் எனும் தொனிப் பொருளில், சமுர்த்தி சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக பொத்துவில் பிரதேச கிராமமட்ட அமைப்பினருக்கு விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெற்றிருந்தன.
இவ் விழிப்புணர்வு செயலமர்வு நிகழ்வானது பொத்துவில் பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் வி.அரசரெத்தினம் தலைமையில் இன்று திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று இருந்தன.
இதன்போது கிராமமட்ட அமைப்புக்களில் இருந்து கலந்து கொண்டு இருந்த நிருவாக உறுப்பினர்களுக்கு தங்களது கிராம மக்களை விழிப்பூட்டும் நோக்கில் குடும்பங்களில் மகிழ்ச்சிக்கு தடையாக இருக்கின்ற மது போதை மற்றும் புகைத்தல் போன்றவற்றின் பாதிப்புக்கள் சமூக சீர்கேடுகள் போன்றன தொடர்பாக மக்களை விழிப்பூட்டும் வகையிலான கருத்துக்கள் வளவாளர்களால் முன்வைக்கப்பட்டு இருந்தன.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், வளவாளர்களாக ஆதம்லெவ்வை தௌபீர், பொத்துவில் பிரதேச சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.அப்துல் மலீக்,பிரதேச செயலக உளவள உத்தியோகத்தர் மற்றும் கிராமமட்ட அமைப்புக்களின் நிருவாகிகள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.
இங்கு உரையாற்றிய பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், வறுமைக்கு பிரதான காரணிகளில் ஒன்றாக மதுபோதை மற்றும் புகைத்தல் காணப்படுவதுடன் உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின் முடிவுகளில் வருடம் ஒன்றுக்கு மதுபோதை மற்றும் புகைத்தல் காரணமாக எட்டு மில்லியன் மக்கள் பாதிப்படையும் அதேவேளை அதிகமான வீதி விபத்துக்கள் ஊடாக இடம்பெறுகின்ற மரணங்களுக்கும் இந்த மதுபோதை பாவனைகள் காரணமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேசத்தில் மது மற்றும் புகைத்தல் பாவனைகளில் ஈடுபடுவோர் மற்றும் சட்டவிரோத விற்பனைகளில் ஈடுபடுவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கவுள்ளதுடன் அவர்களுக்கு சமூர்த்தி முத்திரைகள் மற்றும் அரசினால் வழங்கப்படுகின்ற இலவச உதவிகள் போன்றவற்றை இடைநிறுத்தவுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.