திருகோணமலை முகத்துவார கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல்போயுள்ள நிலையில், அம்மீனவரைத் தேடும் பணியில் பிரதேச மக்களும், கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவார கடலுக்கு நேற்றிரவு மீன் பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்களில், ஒரு மீனவரைக் காணவில்லையெனவும், அம்மீனவரை தேடும் பணியில் பிரதேச மக்களும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன மீனவர் வெருகல்-இலங்கை துறைமுகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பாலசிங்கம் பரமானந்தம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மீனவர், நேற்றிரவு மீன் பிடிப்பதற்காக ஏழு நண்பர்களுடன் படகில் சென்றதாகவும், அவர்கள் சென்ற படகு இயந்திர கோளாறு காரணமாக கவிழ்ந்ததாகவும், இதனையடுத்து ஆறு மீனவர்களும் நீந்திய நிலையில் கடற்கரையை வந்தடைந்த நிலையில், காணாமல் போன மீனவர் நீந்த முடியாது கடலில் அள்ளுண்டு சென்றதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
காணாமல் போன மீனவர் திருமணம் செய்து மூன்று மாதங்கள் கடந்த நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மீனவரை தேடும் பணியில், பிரதேச மக்களும் கடற்படையினரும் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சி)