இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானத்திற்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நாட்டின் எதிர்கால தலைமுறையை அழித்துவரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானத்திற்கு அநுராதபுர மாவட்ட மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் வலிசிங்ஹ ஹரிஸ்சந்திர விளையாட்டரங்கில் இடம்பெறும் ‘என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா’ கண்காட்சி திடலில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி அலுவலகத்தின் விசேட கண்காட்சி கூடத்தில் டிஜிட்டல் தொழிநுட்பத்தினூடாக, இந்த விடயம் தொடர்பாக மக்களிடம் கருத்து அறியப்பட்டு வருகின்றது.
இந்த கண்காட்சியை பார்வையிடவரும் பெருமளவு மக்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்கும் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள மக்கள் கருத்துக்களின்படி 95 வீதமானவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக, மரணதண்டனை வழங்குவதற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சமயத் தலைவர்கள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் பெருமளவில் கண்காட்சியை பார்வையிட வருகை தருவதுடன், அவர்கள் அனைவருடைய விசேட கவனத்தையும் இந்த நிகழ்ச்சித்திட்டம் ஈர்த்துள்ளதை காணமுடிந்தது.
கண்காட்சியில் மக்கள் நலன் பேணலுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் ஜனாதிபதி அலுவலகத்தால் நடைமுறைப்படுத்தப்படும் கிராமசக்தி, தேசிய போதைப்பொருள் ஒழிப்பு, சிறுநீரக நோய் ஒழிப்பு, தேசிய உணவு உற்பத்தி, சுற்றாடல் பாதுகாப்பு, சிறுவர்களை பாதுகாப்போம், நாட்டுக்காக ஒன்றிணைவோம், ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா, சிறிய வியாபார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் உள்ளிட்ட தேசிய நிகழ்ச்சித்திட்டங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் விரிவான மக்கள் பணிகள் குறித்து அறிவூட்டப்படுகின்றன.
அதேபோன்று மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு நேரடியாக முன்வைக்கும் ‘ஜனாதிபதியிடம் தெரிவிக்க’ நிகழ்ச்சித்திட்டமும் இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. (நி)