நாட்டில் 200 புகையிரத குறுக்கு கடவைகளுக்கு மின் ஓசை எழுப்புதல் மற்றும் வர்ண சமிஞ்சைகள் பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
புகையிரத குறுக்கு கடவைகள் மற்றும் அதன் பாதுகாப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றில் நேற்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலலித்த அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்,
‘நாடு முழுவதிலும் 1337 புகையிரத குறுக்கு கடவைகள் உள்ளதாகவும், இவற்றுள் 185 புகையிரத குறுக்கு கடவைகள் தனியார் துறையினரால் கையாளப்படுவதாகவும் கூறினார்.
இதற்கு அமைவாக புகையிரத திணைக்களத்தினால் பாதுகாப்பு வழங்கக்கூடிய புகையிரத குறுக்கு கடவைகளின் எண்ணிக்கை ஆயிரத்து 152 ஆக காணப்படுகின்றது.
அங்கேரிய நாட்டின் கடன் நிதி உதவியின் கீழ் எதிர்வரும் 2 வருட காலப்பகுதிக்குள் 200 புகையிரத குறுக்கு கடவைகளுக்கு மின் ஓசை எழுப்புதல் மற்றும் வர்ண சமிஞ்சைகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதுகாப்பற்ற புகையிரத குறுக்கு கடவைகளில் பாதுகாப்பு உறுப்பினர்களை கடமையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பொலிஸாரின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். (நி)