இலங்கை புகைப்பட ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்பட ஊடக கண்காட்சி 2019 ஐ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் பார்வையிட்டார்.
கண்காட்சி கூடத்திற்கு சென்ற ஜனாதிபதியை, இலங்கை புகைப்பட ஊடகத்துறை சங்கத் தலைவர் தமிந்த ஹர்ஷ பெரேரா, செயலாளர் குஷான் பதிராஜ ஆகியோர் வரவேற்றனர்.
இதன்போது, அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள விசேட விருந்தினருக்கான நினைவுப் புத்தகத்தில் ஜனாதிபதி குறிப்பொன்றை பதிவு செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, விருது பெற்ற முன்னணி புகைப்படக் கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவர்களுடன் குழு புகைப்படம் ஒன்றையும் எடுத்துக்கொண்டார்.
புகைப்பட ஊடக கண்காட்சியை பார்வையிடும் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் கரு ஜயசூரிய, கலைஞர்கள் மற்றும் சிரேஷ்ட புகைப்படக் கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
‘செய்திப் பெறுமதியைக் கொண்ட புகைப்படங்கள்’ என்ற கருப்பொருளில் குறித்த புகைப்படக் கண்காட்சி நடைபெறுகின்றது.
கொழும்பு -07 ஹோட்டன் பிளேசில் உள்ள ஜே.டி.ஏ.பெரேரா கலையரங்கில் நேற்றைய தினம் ஆரம்பித்த புகைப்படக் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகின்றது.
புகைப்பட ஊடகத் துறையின் மூலம் சமூக, பொருளாதார, கல்வி, கலாசார மற்றும் அரசியல் ரீதியாக மக்களுக்கு அறிவூட்டுவதை அடிப்படையாகக் கொண்டு குறித்த புகைப்பட ஊடக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (நி)