112 வருடகால சாதனையை முறியடித்த இங்கிலாந்து

அயர்லாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அயர்லாந்தை 38 ஓட்டங்களுக்குள் சுருட்டி, வெற்றி பெற்றது மட்டுமல்லாது 112 வருடகால சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் சாதனையை முறியடித்துள்ளது.

லண்டன், லோர்ட்ஸ் மைதானத்தில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் அடுத்தடுத்த விக்கெட்டுகளின் சரிவால் முதல் இன்னிங்ஸில் 23.4 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 85 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் ஜோ டென்லி 4 நான்கு ஓட்டங்கள் உட்பட 23 ஓட்டத்தை அதிகபடியாக எடுத்தார். பந்து வீச்சில் அயர்லாந்து அணி சார்பில் டிம் முர்டாக் 13 ஓட்டங்களை வழங்கி 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய அயர்லாந்து, 58.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை எடுத்தது. ஆன்டி பேல்பிர்னி 10 நான்கு ஓட்டங்கள் உட்பட 55 ஓட்டங்களை அதிகபடியாக எடுத்தார். இங்கிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் ஸ்டுவர்ட் பிரோட், ஆலி ஸ்டோன், சாம் கர்ரன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன் பின்னர் முதல் இன்னிங்ஸில் 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி பொறுப்பாக விளையாடியது.

2 ஆம் நாளின் முடிவில் 77.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 303 ஓட்டங்களை பெற்றது. லீச் 92, ராய் 72 ஓட்டங்களை எடுத்தார்கள். இதனால் இங்கிலாந்து அணி 1 விக்கெட் மீதமுள்ள நிலையில் 181 ஓட்டங்களினால் மட்டுமே முன்னிலை பெற்றது.

இந் நிலையில் மழை காரணமாகத் தாமதமாக தொடங்கிய இன்றைய ஆட்டத்தின் முதல் பந்திலேயே கடைசி விக்கெட்டை வீழ்த்தியது அயர்லாந்து அணி.

இதனால் இங்கிலாந்து அணி 2 ஆவது இன்னிங்ஸில் 303 ஓட்டங்களுக்குள் சுருண்டது.இதையடுத்து அயர்லாந்து அணிக்கு வெற்றியிலக்காக 182 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

இப் போட்டியை வெற்றிபெற்று சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்குடன் துடுப்பெடுத்தாட ஆர்பித்த அயர்லாந்து அணி 15.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 38 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 143 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

இங்கிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் கிறிஸ் வோக்ஸ் 6 விக்கெட்டுக்களையும், ஸ்டுவர்ட் பிரோட் 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தனர்.

இந்த தோல்வியின் மூலம் அயர்லாந்து அணி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் ஆட்டமிழந்த அணிப் பட்டியலில் நான்காவது இடத்தை பெற்றது.

அத்துடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ஓட்டத்துக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த 8 ஆவது அணியாகவும் பதிவானது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் குறைவான ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்ற ஐந்தாவது அணி என்ற பெருமையையும் பெற்று 112 வருடகால கிரிக்கெட் சாதனையை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!