சம்தந்தனின் நடவடிக்கை தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் : அனந்தி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்வதென்பது வேடிக்கையான விடயம் என, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றுவதற்கான நாடகத்தை முன்னெடுத்து வருகின்றது என, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில், இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்த அரசிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவை வழங்கி வருகின்றது, மேலும்
இந்த அரசைத் தாம் தான் கொண்டு வந்ததாகவும் அவர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் தமிழ் மக்கள் நலன்சார்ந்த விடயங்களில் அக்கறை செலுத்தவில்லை. அதனால் தான் தமிழ் மக்கள் இன்றைக்கும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக கடந்த நான்கு வருட காலமாக இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் எதுவித முன்னேற்றமும் இல்லை, தீர்விற்கான எந்தவித அழுத்தத்தையும் அரசிற்கு கொடுக்கவில்லை.

அரசின் நான்கு வருட ஆட்சிக் காலத்தில் இவை எதனையும் செய்யாமல் ஆட்சியில் மூன்று மாத காலம் மட்டுமே இருக்கின்ற நிலையில் சம்மந்தன் இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் பேசுகின்றனர்.

அரசிற்கு அழுத்தங்களையும் எச்சரிக்கையையும் கொடுப்பதாக கூறுகின்றனர். தேர்தல்கள் நெருங்கும் நேரம் என்பதால் தமது வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காகவே இத்தகைய செயற்பாடுகளைச் செய்கின்றனர்.

இவை எல்லாம் மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகமே தவிர வேறேதும் இல்லை. உண்மையில் இதய சுத்தியுடன் செயற்பட்டிருந்தால் தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வைக் காணக் கூடியதாக இருந்திருக்கும்.

ஆகவே கூட்டமைப்பினரின் இந்த ஏமாற்றுவித்தையை தமிழ் மக்கள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதே வேளை இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது ஆளும் மற்றும் எதிர்த் தரப்பின் உறுப்பினர்கள் பலரும் சபையில் இல்லை.

இனப்பிரச்சனை தொடர்பில் பேசுவதற்கே சபையில் இருக்க முடியாதவர்கள் இனப்பிரச்சனைக்கான தீர்வை இனித் தரப்போகின்றனர் என்ற கேள்வி எழுகின்றது.

எடுக்க வேண்டிய முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்காமல் விட்டுவிட்டு இப்போது அதைப்பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை என குறிப்பிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!