மக்களுக்கு வினைத்திறனான சேவை கிடைக்கும் வகையில், மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகங்களை பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்து சமுத்திரத்தின் ஒரு கேந்திரமாக வருவதற்கு நாம் ஆசைப்பட்டால் எமக்கு ஒரு பெரிய நகரம் தேவைப்படுகிறது எனவும், அதனையே இங்கு அமைத்து வருவதாகவும் குறிப்பிட்ட பிரதமர், இதன் பயன்களை எதிர்வரும் சில வருடங்களில் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
இயற்கை மற்றும் மனித நடத்தைகள் சார்ந்த அனர்த்தங்கள், அரசியலமைப்பு சர்ச்சை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட பல சவால்களை நாம் எதிர்கொண்டுள்ளோம் எனவும், இந்த அனைத்து சவால்களிலிருந்து மீண்டெழுந்து, எதுவித தடங்கலுமின்றி அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.
நாடு தற்போது ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கிய நவீன யுகத்திற்குள் பிரவேசித்துள்ளதாகவும், இதற்கு தேவையான திருத்தங்களை அரச மற்றும் தனியார் துறைகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் முன்னேற்றகரமான நடவடிக்கையாக துறைமுக நகரை ஒரு உலக நிதி கேந்திரமாக மாற்றி வருவதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், இது சிங்கப்பூர், டுபாய் போன்ற சர்வதேச வர்த்தகத்திற்கு துணை புரியும் என்றும் மேலும் தெரிவித்தார். (நி)