குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் பெண்ணியல் நோய் தொடர்பான சிரேஷ்ட வைத்தியர் சேகு சிகாப்தீன் மொஹம்மட் ஷாபி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முறையற்ற விதத்தில் சொத்து சேகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பில், குருணாகல் வைத்தியருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எதிரான வழக்கு விசாரணை குருணாகல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.
இந்த நிலையில், குறித்த வழக்கு கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேக நபரான வைத்தியரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு, இன்று குருணாகல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது, நீதிவான் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.
இதேவேளை, வைத்தியர் ஷாபியின் வழக்கு விசாரணைக்கு முன்னதாக, குருணாகல் மக்களினால் அமைதிப் போராட்டம் ஒன்று, இன்று காலை 9.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பலத்த பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. (சி)