யாழில், குளவிகள் தாக்கியதில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் ஊரெழு பர்வத வர்த்தினி அம்மன் ஆலயத்தில், மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்த குளவிக் கூட்டில் இருந்து, குளவிகள் கலைந்து சென்று தாக்கியதில், முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், ஊரெழுவைச் சேர்ந்த, 63 வயதுடைய ஐயாத்துரை அருந்தவராஜா என்பவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து, ஆலயத்தில் இருந்த பக்தர்கள் இடையே குழப்ப நிலை காணப்பட்டது.

ஊரெழு பர்வத வர்த்தனி அம்மன் ஆலயத்தில், வருடாந்தத் திருவிழா இடம்பெற்று வரும் நிலையில், இன்று மூன்றாம் திருவிழா நடைபெற்றது.

மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்த குளவிக்கூடு கலைந்ததால், அங்கு கூடியிருந்த பக்தர்கள், நாலா திசையும் ஓடியுள்ளதுடன், இதன் போது, குளவி மூவருக்கு மேற்பட்டோர் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், முதியவர் ஒருவர் குளவி தாக்கியதில், உடனடியாக அவசர அம்புலன்ஸ் சேவைக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அம்புலன்ஸ் வண்டிச் சாரதியையும் முதலுதவி உதவியாளரையும், குளவிகள் துரத்தியுள்ளது.

மேலும் ஒரு இளைஞன் மோட்டார் சைக்கிளில் சென்ற போதும், சுமார் ஒன்றரைக் கிலோ மீற்றருக்கு குளவிகள் துரத்திச் சென்றுள்ளது.

இதன் போது, சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் பொலிஸார், உடனடியாகவே அங்கிருந்து வெளியேறினர்.
அதன் பின்னர், யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது.

குளவியைக் கலைப்பதற்கு எரிவாயு நிரப்ப வேண்டும் என்பதனால், தீயணைப்பு படை சம்பவ இடத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

இதேவேளை, காட்டுத் தேன் குளவிக்கூடே கலைந்ததாக, ஆலயப் பகுதியில் இருந்தவர்கள் குறிப்பிட்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!