நாட்டில் அடிப்படைவாதம் உருவாக இடமளிக்க முடியாது : தயாசிறி

தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில், பிரிவினை குரோதத்தினை ஏற்படுத்த காரணமாக அமைந்த, கறுப்பு ஜுலை தினத்தை வருடந்தோறும் அனுஸ்டிக்க, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்திருப்பதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று, கறுப்பு ஜூலை நடைபெற்று 36 வருடங்கள் நிறைவடைவதையொட்டி நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் வெள்ளை ஜுலை என்று பேசுகின்றார்கள். கறுப்பு ஜுலையை மறந்து விட்டார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியில் தற்போது இருக்கின்ற ஒரு சில தலைவர்களுக்கும், கறுப்பு ஜுலை சம்பவத்துடன் தொடர்பு இருக்கின்றது. இலங்கை வரலாற்றில் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு காரணமானவர்கள் ஐக்கிய தேசிய கட்சியினர்.

தமிழ் சகோதரர்களின் அனைத்து கடைகளையும் ஒரு நாளில் தாக்கி அழித்தார்கள். கொழும்பில் மட்டுமல்ல, எனது நகரான கெட்டிப்பொல நகரத்தில் இருந்த தமிழ் சகோதரர்களின் கடைகளையும் தீ மூட்டி எரித்தார்கள்.

நான் சிறுவனாக இருந்த போது கடை எரிக்கப்பட்டது எனக்கு ஞாபகம் இருக்கின்றது. இந்த ஈனச் செயலை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இனவாத நெருப்பினால் நாடு சீரழிந்தது. நீண்ட காலத்திற்கு பின்னராவது, கறுப்பு ஜுலை தொடர்பில் பேசுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன ரீதியான கட்சி அல்ல. அது தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி.
அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்த நாடு என்றுதான் நாம் பேசி வருகின்றோம்.

அதன் காரணத்தினால் கறுப்பு ஜுலை தினத்தை வருடந்தோறும் அனுஸ்டிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில்தான், இனப்பிரச்சினைக்கான தீர்;வொன்றினை முன்வைப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அவர் முன்வைத்த திட்டத்தினையும் தீ மூட்டி எரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியினர்.

இன ரீதியான தாக்குதல் இடம்பெற்றதன் காரணமாக யுத்தம் ஏற்பட்டது. எனவே மீண்டும் அவ்வாறு ஒன்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்கின்றோம்.

தற்போது முஸ்லீம் அடிப்படைவாதம் ஏற்பட்டுள்ளது. நாம் அடிப்படை வாதத்திற்கு எதிரானவர்கள். அது சிங்கள அடிப்படைவாதமாக இருக்கலாம் தமிழ் அடிப்படை வாதமாக இருக்கலாம் அல்லது முஸ்லீம் அடிப்படை வாதமாக இருக்கலாம், அனைத்து அடிப்படை வாதத்திற்கும் நாம் எதிரானவர்கள்.

ஸ்ரீலங்கன் என்று சொல்பவர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி. இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்தை சார்ந்த அனைவரையும் ஒன்றிணைக்கும் கட்சியாக நாம் இருக்க வேண்டும்.

அந்த வகையில் தமிழ் சிங்கள மக்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்த காரணமாக இருந்த கறுப்பு ஜுலை தினத்தினை வருடந்தோறும் அனுஸ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!