ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்களே, வரலாற்றுச் சின்னமாக விளங்கிய, யாழ்ப்பாண நூலகத்தினை எரித்தார்கள் எனவும், அதற்கு ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் உடந்தையானார்கள் எனவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோகண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜீலை தினத்தை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வருடந்தோறும் அனுஸ்டிக்க தீர்மானித்துள்ளமை தொடர்பில், கொழும்பில் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
1981ம் ஆண்டு, பஸ்களிலும் புகையிரதத்திலும் தேர்தல் நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் சென்ற, ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்கள், தேர்தல்; மோசடியில் ஈடுபட்டது மட்டுமல்ல, வரலாற்றுச் சின்னமான, யாழ். நூலகத்தினையும் தீமூட்டி கொழுத்தினார்கள்.
இதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடந்தையாக இருந்தார்கள். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, இனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என பேசும் கட்சி. தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் கொண்ட கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.
இனங்களின் மதங்களின் கலாசார அடையாளங்களை மீண்டும் நிர்மாணிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்று பேசிவரும் ஐக்கிய தேசிய கட்சியினர் தான் தமிழர்களின் கலாசார சின்னமாக விளங்கிய யாழ்ப்பாண நூலகத்தினை தீ மூட்டி எரித்தார்கள்.
யாழ் நூலகத்தினை எரித்ததற்கு ஒரு சிங்கள அறிஞர் எழுதியிருந்தார். புத்த பகவானை தீயிட்டு எரித்து விட்டார்கள். வரலாற்றினை அழித்து விட்டார்கள் புத்தகத்தினை எரிப்பது மிகவும் பாதாளச் செயல் என்று எழுதியிருந்தார்.
இந்த நூலக எரிப்பு, ஐக்கிய தேசிய கட்சி ஏற்படுத்திய கறுப்பு ஜுலையின் பிரதிபலனே. நாம் இன்று மிகவும் மன வேதனையுடன் கறுப்பு ஜுலை தினத்தை அனுஸ்டிக்க இருக்கின்றோம்.
இதுபோல் ஒரு இனக்கலவரம் மீண்டும் இந்நாட்டில் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை, அனைவருக்கும் ஞாபகப்படுத்துவதற்காக நாம் இதனை வருடந்தோறும் அனுஸ்டிப்பதற்கு எண்ணியிருக்கின்றோம்.
இந்த வேளையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒன்றை சொல்லி வைக்க விரும்புகின்றோம்.
அரச ஊழியர்களுக்கு சம்பளத்தினை அதிகரிப்பதன் ஊடாக, அரசாங்க வேலை வாய்ப்பை வழங்குவதன் ஊடாக, கறுப்பு ஜீலையை வெள்ளை ஜீலையாக மாற்றி விட முடியாது. என குறிப்பிட்டுள்ளார். (சி)