பாராளுமன்றில் இரா.சம்பந்தன் ஆவேசம்!

பிரிக்கப்படாத ஒற்றுமைப்பட்ட இலங்கைக்குள் வாழ, உச்சபட்ச அதிகாரப் பரவலாக்கல் மேற்கொள்ளப்பட வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தடைப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கேள்வி எழுப்பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையை முன்மொழிந்து, பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட, 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பை நீக்குவோம் என்ற வாக்குறுதிக்கு அமைவாகவே புதிய அரசாங்கத்திற்கு எமது மக்கள் வாக்களித்து மாற்றத்தை கொண்டுவந்தார்கள்.

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு யாப்பானது, அப்போது ஆட்சியில் இருந்த ஜ.தே.க அரசு, தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனேயே கொண்டு வந்ததது.

அதற்குரிய ஆணையை மக்களிடம் இருந்தும் பெற்றுக்கொள்ள முயலவில்லை. 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுப்பதாக, பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஒவ்வொரு காலப்பகுதியிலும் தேர்தல்கள் இடம்பெறுகின்ற போதெல்லாம், அரசியல் கைதிகள் இதனை வலியுறுத்தியுடன், வாக்குறுதிகளும் வழங்கப்பட்டன. அவை பல வேளைகளில் மீறப்பட்டும் உள்ளன. ஆனால் மக்கள் காலகாலமாக, 78 ஆம் ஆண்டு அரசியலமைப்பை நிராகரித்தே வருகின்றார்கள்.

2015 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதாக வாக்குறுதியளித்தனர். இதற்கு இணங்க 90 வீதமான மக்கள் தேர்தலில் வாக்குறுதியளித்தனர். ஆனால் நடைமுறை அதற்கு மாறாகவே காணப்படுகின்றது.

ஆனாலும், 2015 ஆம் ஆண்டு, பாராளுமன்றில் புதிய அரசியலமைப்பை உருவாக்க பலரும் தமது ஆதரவை வழங்கினார்கள். அதன் பின், பல உப குழுக்கள் உருவாக்கப்பட்டு, முன்மொழிவுகள் சமர்பிக்கப்பட்டன.

ஆனால் இன்று சில மறை நோக்கம் கொண்ட காரணங்களுக்காக, அரசியலமைப்பு விடயம் கவனத்தில் கொள்ளப்படாமையானது, 2015 ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையை மீறும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகின்றது.

அத்துடன், 2016 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்ட அனுமதியை, மீறும் ஒரு செயலாகவும் இது காணப்படுகின்றது.

இந்த நாடானது அரசியலமைப்பை கொண்டே ஆளப்பட வேண்டும். ஆனால் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியலமைப்பைக் கொண்டல்ல.  இதனை மாற்ற வேண்டியது பாராளுமன்றத்தின் கடமையாகவுள்ளது.

சுதந்திரத்திற்கு முன்னர், தமிழ் மக்கள் பிரிவினை குறித்து சிந்தித்தார்களா? இல்லை.

அதற்கு பின்னரே எமது பல தலைவர்கள், குறிப்பாக தந்தை செல்வநாயகம், பண்டாரநாயக்க மற்றும் டட்லி சேனநாயக்க போன்றோருடனும், தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பாக பேசினார்கள். அன்று தொடக்கம் தமிழ் மக்களுக்கான தீர்வு முயற்சிகள் எடுக்கப்பட்டடே வந்தன.

ஆனால் என்ன நடந்தது?

தமிழீழ விடுதலைப்புலிகள் ஏன் ஆயுதம் ஏந்த வேண்டி ஏற்றப்பட்டது.  இதனை நீங்கள் அறிவீர்கள்.  ஆகவே, தமிழ் மக்கள் நிராகரிக்கும் அரசியலமைப்பொன்றின் ஊடாக, நாம் ஆளப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இலங்கையில் 30 வருட காலமாக இடம்பெற்ற போரை முடிவுக்கு கொண்டு வர, சர்வதேச நாடுகள் பல இலங்கைக்கு உதவியது.

இந்த உதவிகளால் பாதிக்கப்பட்ட தரப்பாக, தமிழ் மக்களே மாறியிருக்கின்றனர்.  விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு, இன்று 10 வருடங்கள் கடந்துள்ளது.

ஆனால், தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே நடாத்தப்பட்டு வருகின்றனர். இதனை சர்வதேச சமூகம், சாதாரண பார்வையாளராக கடந்து செல்ல முடியாது.

நாங்கள் இலங்கையை பிரிக்க விரும்பவில்லை. இலங்கையை பிரிக்காது தீர்வை பெறுவதே, எமக்கு பலமானதாக அமையும்.

ஆனாலும் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைவாக, எமக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையைக் கோர நிச்சயம் உரித்து உண்டு.

இதனை யாராவது தடுத்து விட முடியுமா?, தடுத்து விடவும் முடியாது.  இன்று வடக்கு கிழக்கில் உள்ள மக்களுக்கும் எமக்கும் ஒரு அச்சம் ஏற்பட்டிருக்கின்றது.

சிங்கள பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள், எமது பிரதேசத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதனால், எமக்கான தீர்வு மறுக்கப்படுகின்றது .

இவ்விடயமும் சூட்சுமமாக முன்னெடுக்கப்படுகின்றது. ஆகவே, அரசியலமைப்பு அதிகாரம் மத்தியில் இருப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்.

கற்றுக்கொண்ட நல்லிணக்க ஆணைக்குழு உங்களால் நியமிக்கப்பட்டது.  அது குறிப்பிடுவது போன்று, தேசியப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

இது உயர் தகமை வாய்ந்தவர்களாலேயே முன்வைக்கப்பட்டது. அதனை நிறைவேற்றாது இருப்பது உங்களது தவறு.
ஆகவே, எல்.எல்.ஆர்.சி குறிப்பிடுவது போன்று, தேசிய பிரச்சினையை தீர்க்க புதிய அரசியலமைப்பை உருவாக்குங்கள், அதிகார்ங்களை பரவலாக்குங்கள்.

1957 ஆம் ஆண்டு, பண்டார நயக்கவினால், பின்னர் டட்லி சேனநாயக்கவினால், பிரமேதாஸவினால், பின்னர் சந்திரிக்க பண்டார நாயக்கவினால், அதன் பின்பு மகிந்த ராஜபக்சவினாலும், இப்போது மைத்ரி-ரணில் கூட்டணியினாலும் இனப்பிரச்சினையை தீர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

அவை முடிவுறுத்தப்படவில்லை. எனவே அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுங்கள். இவ்வாறு நாம் விரும்பாத அரசியலமைப்பின் கீழ், எம்மை தொடர்ந்தும் ஆள நினைந்தால் அது தவறாக அமையும்.

அத்துடன், நீங்கள் தோல்வியடைந்த அரசாக, சர்வதேச அங்கீகாரத்தை இழந்து, செல்லுபடியற்ற அரசாக மாற்றப்பட்டு விடுவீர்கள்.

வடக்கிலும் கிழக்கிலும் வாழும் நாம், தொடர்ந்தும் இரண்டாம் தர பிரஜைகளாக வாழ முடியாது.  நாங்கள் கௌரவத்துடன் வாழ வேண்டும்.

ஆகவே உச்சபட்ச அதிகாரபரவலாகத்தை எமக்கு வழங்க நடவடிக்கை எடுங்கள். பிரிக்கப்படாத ஒற்றுமைப்பட்ட இலங்கைக்குள் வாழவே நாம் விரும்புகின்றோம்.

இதனை உலக தலைவர்கள் பலரும் வலியுறுத்தியும் இருக்கின்றனர்.  என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!