ஆசிரியரை தாக்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கையினை பொலிசார் மேற்கொள்ளவில்லை

சிவில் பாதுகாப்பு குழுக்கள் முறையாக செயற்பட்டால் நாட்டில் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களை தடுக்கலாம் என கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர தெரிவித்தார். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் செயற்பட்டுவரும் சிவில் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகளோடு இன்று(25) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அம்பாரை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மாறப்பன மற்றும் பொத்துவில் பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் வெலிசரகே ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் க.பேரின்பராசா ஆலையடிவேம்பு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஆ.சசீந்திரன் உள்ளிட்ட சமயத்தலைவர்கள் சிவில் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
பிரதி பொலிஸ்மா அதிபர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… நாட்டில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் யாவும் ஒரு நாளிலே திட்டமிடப்படுபவை அல்ல. பல நாட்களிலேதான் அவை திட்டமிடப்படுகின்றன. அவ்வாறான செயற்பாடுகளை சிவில் பாதுகாப்பு குழுக்களின் மூலம் தடுக்கலாம். அதுபோலவே சிவில் பாதுகாப்பு குழுக்கள் முறையாக செயற்பட்டிருப்பின் ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் நடைபெற்ற அசம்பாவிதம் தடுக்கப்பட்டிருக்கும் எனக்கூறினார்.

அதேவேளை எந்தவித கொடுப்பனவுமின்றி சமூகத்திற்கான சேவையினை கௌரவமாக வழங்கிவரும் சிவில் பாதுகாப்பு குழுக்களின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுவருவதையும் இங்கு குறிப்பிட வேண்டும் என்றார்.

மேலும் மக்களுக்காகவே பொலிசார் எனவும் பொலிசாருக்காக மக்கள் இல்லை என்பதையும் ஞாபகமூட்ட விரும்புகின்றேன் என்றார்.

தொடர்ந்து இங்கு சிவில் பாதுகாப்பு குழக்களின் பிரதிநிதிகள் தங்களது முறைப்பாடுகளையும் கோரிக்கையினை முன்வைத்தனர்.

இங்கு பொலிசாரின் சில சேவைகளை பாராட்டிய பிரதிநிதிகளுக்கு மத்தியில் குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிலரால் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் ஆசிரியரை தாக்கியவர்களுக்கு எதிராக முறையான நடவடிக்கையினை பொலிசார் மேற்கொள்ளவில்லை எனவும் ஒருவர் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இருவரை தேடி வருவதாகவும் கூறினார். இதேவேளை இதற்கு பதிலளித்த பொலிஸ்மா அதிபர் இன்னும் ஒரு வாரத்தினுள் இதற்கான தீர்வை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

இதேநேரம் ஆலையடிவேம்பின் மத்திய பகுதியில் உள்ள மதுபானசாலைகள் தொடர்பாகவும் அதனால் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் தொடர்பாகவும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அத்தோடு பாடசாலை நேரங்களில் தகாத செயற்பாடுகளில் ஈடுபடும் சிலரது நடவடிக்கை தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டதுடன் இதற்கான விரைவான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவேண்டும் எனும் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இதனை செவிமடுத்த கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை தட்டிக்கேட்கவும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் பொலிசார் எந்நேரமும் தயாராகவுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் உடனடி தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

Recommended For You

About the Author: Suhirthakumar

error: Content is protected !!