இரத்தம் மாற்றி ஏற்றிய விவகாரம் : வழக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு வைத்தியசாலையில், இரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, முழுமையான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாவிட்டால், குறித்த வழக்கை குற்றப் புலனாய்வுத்துறையினரிடம் பாரப்படுத்த வேண்டி வரும் என, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த 9 வயதுடைய ஜெயக்காந்தன் விதுலஷ்சன் என்ற சிறுவன், கடந்த ஜனவரி மாதம் 3ஆம் திகதி விபத்தில் காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகளின்போது, அவருக்கு இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. அதன் பின்னர் காயம் தீவிரமடைந்தமையினால், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நலமாகி வந்த சிறுவன், மீண்டும் நோய்வாய்ப்பட்டுள்ளார். அதனையடுத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட சிறுவனின் கிட்னி பகுதியில் சிறிய கசிவு ஏறபட்டுள்ளதாகவும் எனினும் அதனால் எந்த பாதிப்பும் இல்லையென்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்பின்னர் அவரது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக பெற்றோர் வைத்தியரிடம் விசாரித்துள்ளனர்.

இரத்தம் மாற்றி ஏற்றியதால்தான் கிட்னி இரண்டும் பாதிப்படைந்துள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்ததாக உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் தெரிவித்திருந்தனர்.

அத்தோடு, இந்த விடயம் தொடர்பாக 18ஆம் திகதி தனக்கு தெரிய வந்ததாகவும் தனது மகன் 19ஆம் திகதி உயிரிழந்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

மேலும் இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதாலேயே தனது மகன் மரணித்ததாக பொலிஸாருக்கு அறிக்கை வழங்கியுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாகவும் உயிரிழந்தவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது பொலிஸார் வழங்கிய அறிக்கைகள் திருப்தியளிக்காத நிலையில் முழுமையான அறிக்கையினை எதிர்வரும் 7 ஆம் திகதி நீதிமன்றுக்கு வழங்குமாறும் அது திருப்தியளிக்காவிட்டால் குறித்த வழக்கினை குற்றப் புலனாய்வுத்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் நீதிவான் நீதிமன்ற நீதிபதி பணிப்புரை விடுத்தார்.

குறித்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் திங்கட்கிழமை இரண்டு தாதியர்கள் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!