மன்னாரில் சட்டவிரோத கற்றாளை அகழ்வு

மன்னாரில், பிரதேச சபையின் தீர்மானத்தை உதாசீனம் செய்து, சட்டவிரோதமான முறையில் கற்றாளைத் தாவரங்கள் அகழ்ந்தெடுக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மன்னார்-நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கிராமத்தின் எல்லைப்பகுதியில், வங்காலை மன்னார் பிரதான வீதியின் அருகில் உள்ள வனப்பிரதேசமான ‘கற்றாலம் பிட்டி’ பிரதேசத்தினுள், இயற்கை வளமான கற்றாளைத் தாவரங்கள் பரந்து காணப்படுகின்றன.

குறித்த கற்றாளைத் தாவரம், வியாபார நோக்குடன், தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் அகழ்வு செய்யப்பட்டு வருவதாக, வங்காலை மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று அப்பகுதியில் கற்றாளை அகழ்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், வங்காலை மக்களின் எதிர்ப்பினால் அகழ்வு பணிகள் கைவிடப்பட்டது.

இக் கற்றாளைச் செடியானது பல மருத்துவ குணத்தையும் நன்மைகளையும் கொண்டதுடன், இதன் மூலம் பல விலையுயர்ந்த பாவனைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதனால் மன்னார், எருக்கலம்பிட்டி, சாந்திபுரம், தாராபுரம் போன்ற கிராமங்களில் இருந்து இவ்வாறான செடிகள் மற்றும் வளங்கள் வியாபார நோக்கத்திற்காக பிடுங்கப்பட்டு வெளிப்பிரதேசங்களுக்கும், வெளிநாடுகளிற்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நானாட்டான் பிரதேச சபையினால் அண்மையில் வங்காலை ‘கற்றாலம் பிட்டி’ பகுதியில் கற்றாழை அகழ்விற்கு எதிராக பிரேரணை கொண்டு வரப்பட்டு தடை விதிக்கப்பட்டதுடன், குறித்த அகழ்வு பணியை தடை செய்தல் தொடர்பாக அறிவித்தல் பலகையும் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.

எனினும் கற்றாளை அகழ்வுப் பணிகள் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் குறித்த பகுதியில் கற்றாளை அகழ்வில் ஈடுபட்ட நான்கு நபர்கள் மக்களால் பிடிக்கப்பட்டு வங்காலை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

வங்காலை பொலிஸார் குறித்த நபர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், சந்தேகநபர்கள் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டமையினால், அவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது. (சி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!