மட்டக்களப்பு காத்தான்குடியில் நேற்று மாலை வீடொன்றில் தீ பரவியுள்ளது. இதனால் வீட்டின் ஒரு பகுதி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
காத்தான்குடி 4ம் குறிச்சி ஹிஜ்றா வீதியிலுள்ள ஏ.முயீஸ் என்பவரின் வீட்டிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது.
இவ் வீட்டில் திடீரென தீ பரவியதையடுத்து அயலவர்கள் மற்றும் அப்பகுதியில் வீட்டு நிர்மான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் ஒன்று சேர்ந்து தீயை அணைத்துள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி அலுவலகத்துக்கு அறிவித்ததையடுத்து அதன் ஊழியர்களும் விரைந்து வீட்டுக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.
இந்த தீ சம்பவத்தினால் வீட்டின் ஒரு பகுதி எரிந்து சேதமடைந்துள்ளதுடன் வீட்டின் சில பொருட்களும் எரிந்து சேதமடைந்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் ஆகியோரும் எரிந்த வீட்டினை பார்வையிட்டுள்ளனர். (சி)