மலிங்க சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு

பங்களாதேஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் சர்வதேச போட்டியுடன் சர்வதேச ஒருநாள் அரங்கிலிருந்து விடைபெறவுள்ளதாக நேற்று(திங்கட்கிழமை) மலிங்க உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள மலிங்க இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலினை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில், ‘பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிரிக்கெட் சபையிடம் அறிவித்திருந்தேன். இந்த நிலையில் தற்போது குறித்த விடயத்தை உறுதிப்படுத்திக்கொண்டேன்.

நான் ஓய்வுபெறுகிறேன் என்பதை ஏற்றுக்கொண்ட இலங்கை கிரிக்கெட் சபை, என்னுடைய விருப்பத்துக்கு ஏற்ப முதல் போட்டியில் மாத்திரம் விளையாட சம்மதம் தெரிவித்தது.

இலங்கை கிரிக்கெட் அணிக்காக 16 வருடங்கள் விளையாடி, வெற்றிபெறுவதற்கான சவால்களை எதிர்கொண்டு பங்களிப்பு வழங்கவும், பலரிடம் எதிர்த்து நின்று எனது திறமையினை வெளிப்படுத்தி அணியில் நிலைத்து நிற்கவும் ரசிகர்களான உங்களின் சக்தி எனக்கு கிடைத்தமையை இட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அத்துடன், எனது பின்னால், எனக்கு ஆதரவு வழங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

அதேநேரம், எதிர்வரும் 26 ஆம் திகதி கெத்தாராம மைதானத்தில் நான் இறுதி ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடவுள்ளேன். முடிந்தால் மைதானத்துக்கு வருகைத்தந்து என்னுடைய இறுதி ஒருநாள் போட்டியை பார்க்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் இதன் பின்னர் நான் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை பார்வையிட முடியாது.

இதேவேளை, இத்தனை காலமாக என்னை அணியிலிருந்து வெளியேற்ற, ஒன்றிணைந்தோ அல்லது தனியாகவோ முயற்சித்த அனைவருக்கும் எனது அனுதாபங்களை தெரிவிக்கிறேன். ஏனென்றால், நான் எனது திறமை காரணமாக மாத்திரமே அணியில் இருந்தேன்.

கிரிக்கெட் வீரர் என்ற ரீதியில் நான் சிறப்பாக செயற்பட்டுள்ளேன் என நினைக்கிறேன். அதேநேரம், 26 ஆம் திகதி அனைவரும் மைதானத்துக்கு வருகைதருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க 2004ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகியிருந்ததுடன், 2006ம் ஆண்டு இருபதுக்கு இருபது போட்டிகளில் அறிமுகமாகியிருந்தார்.

டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை 2010ம் ஆண்டு நிறைவுசெய்துக்கொண்ட இவர், 30 டெஸ்ட் போட்டிகளில் 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதேநேரம், இவர் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் முறையே 335 மற்றும் 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!