கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி தேவதாசனின் சாகும்வரையான உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி தேவதாசனின் சாகும்வரையான உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறையில் கடந்த பத்து வருடங்களிற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபன தமிழ்ப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான கனகசபை தேவதாசன், உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்து முன்னெடுத்து வந்தார்.
கடந்த 15ஆம் திகதி அதிகாலை முதல் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் ஆரம்பித்திருந்தார்.
யாழ்ப்பாணம் கரவெட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த தேவதாசன், கொழும்பு கோட்டை ரயில் நிலையக் குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.
2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் கைது செய்யப்பட்ட தேவதாசனுக்கு 2017ஆம் ஆண்டு கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.
தனக்காக வாதிட சட்டத்தரணிகள் எவரையும் தேவதாசன் அப்போது அனுமதித்திருக்கவில்லை. மாறாக தேவாசனே தனக்காக நீதிமன்றத்தில் வாதாடியிருந்தார்.
இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு எதிராக கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு வசதியளிக்குமாறு கோரி அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இதற்கமைய கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டத்தரணியின்றி மனு ஒன்றைத் தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு கோரி இலங்கை நீதியமைச்சுக்குத் தேவதாசன் கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். ஆனால் உரிய பதில் கிடைக்காததால், அவர் சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் இன்றையதினம் கொழும்பு மகசின் சிறைச்சாலை சென்ற அமைச்சர் மனோ கணேசன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்ததாக அறிவித்துள்ளார்.
இன்றையதினம் அமைச்சர் மனோ கணேசனுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், கவீந்திரன் கோடீஸ்வரன் உட்பட மேலும் சில அரசியல் பிரநிதிநிதிகளும், சிறைச்சாலைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதியைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், அரசியல் கைதிகள் தொடர்பில் விசேட அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.