அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் ஜனாதிபதி!

 

நேரடியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய முதுகெலும்புடைய ஒரு தலைவர் தான் என்பதை பல தடவைகள் வெளிப்படுத்தியுள்ளதாக, ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தன்னை முதுகெலும்பற்ற ஒரு தலைவராக சுட்டிக்காட்ட சிலர் முயற்சிக்கின்ற போதிலும், நேரடியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய முதுகெலும்புடைய ஒரு தலைவர் தான் என்பதை பல தடவைகளிலும் வெளிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற இராணுவத்தினருக்கு நலன்புரி நன்மைகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஏப்ரல் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயத்தை புனரமைப்பின் பின்னர் திறந்துவைத்த கொழும்பு மறைமாவட்டப் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்;டகை, அங்கு உரையாற்றும்போது, நாட்டை ஆட்சி செய்யும் முதுகெலும்பற்ற தலைவர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று உரையாற்றியிருந்தார்.

இந்நிலையில், நேற்றைய நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி நேரடியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய முதுகெலும்புடைய ஒரு தலைவர் தான் என்பதை பல தடவைகள் வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

‘நான் அனைத்து சமயங்களையும் மதிக்கும் ஒரு தலைவர் என்ற வகையில் அனைத்து மத தலைவர்களையும் போற்றுகின்றேன்.
ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் யாராக இருப்பினும் அவை தொடர்பில் என்னுடன் வெளிப்படையாக கலந்துரையாட முடியும், தேவையேற்படின் ஊடகங்களிற்கு முன்னாலும் அதனை மேற்கொள்ள முடியும்.

என்னை முதுகெலும்பற்ற ஒரு தலைவராக சுட்டிக்காட்ட சிலர் முயற்சிக்கின்ற போதிலும், நேரடியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய முதுகெலும்புடைய ஒரு தலைவர் என்பதை 2015ஆம் ஆண்டு தேர்தலின்போதும் அதன் பின்னர் பல தடவைகளிலும் வெளிப்படுத்தியுள்ளேன்.

கடந்த அரசாங்கத்தைப் போன்றே தற்போதுள்ள அரசாங்கத்திலும் இடம்பெறும் ஊழல், மோசடிகளை கண்டறிவதற்கு முதுகெலும்புடைய ஒரு தலைவர் என்பதனாலேயே ஆணைக்குழுக்களை நியமிக்க நான் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

பாதாள உலகத்தினர், குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகளுடன் போராடுவதற்கும் அதுவே காரணமாகும்.

முதுகெலும்புடைய தலைவர்கள் மேற்கொள்ள வேண்டியது விமர்சனங்களை முன்வைப்பது அன்றி கடத்தல்காரர்கள், குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி, நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைவதாகும்.

விமர்சனங்கள் தேவையானவை என்றபோதிலும் அவை நாட்டையும் மக்களையும் தவறான வழியில் இட்டுச் செல்லக்கூடிய, அரசாங்கத்தை அசௌகரியங்களுக்கு உட்படுத்தக்கூடிய பாரதூரமான விமர்சனங்களாக அமையக்கூடாது.

இன்று இந்த விமர்சனங்களை முன்வைக்கும் சகலரும் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்னர், எமது வீரமிக்க இராணுவத்தினர் உள்ளிட்ட ஒட்டுமொத்த பாதுகாப்புத் துறையினரும் தமது உயிரை துச்சமாக மதித்து நிறைவேற்றிய உன்னத மனித நேய செயற்பணிகளையே காட்டிக்கொடுக்கின்றனர்.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற துன்பியல் சம்பவத்தில் உயிரழிந்தவர்கள் தொடர்பில் அன்று போலவே இன்றும் நான் வேதனை அடைகின்றேன். அதனை ஒருபோதும் மறக்க முடியாது.’ என தெரிவித்தார்.

‘சத்விரு அபிமன் 2019’ இராணுவத்தினருக்கு நலன்புரி நன்மைகளை வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல்
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முப்பது வருடங்களுக்கும் மேற்பட்ட பயங்கரவாத யுத்தத்தை முடிவுறுத்திய வீரமிக்க இராணுவத்தினருக்கு பல்வேறு நலன்புரி நன்மைகள் இதன்போது பெற்றுக்கொடுக்கப்பட்டன.

முப்படையினர், பொலிசார் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் இராணுவத்தினர் மற்றும் இராணுவத்தினரின் பிள்ளைகள் உள்ளிட்ட ஆயிரத்து 504 பேருக்கு இந்த நன்மைகள் வழங்கப்பட்டன.

இதற்கமைய முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகள், பகுதியளவில் நிறைவு செய்யப்பட்ட 925 வீடுகள், மாணவர்களுக்கான 308 புலமைப்பரிசில்கள் மற்றும் வசிப்பிடங்களுக்கான 246 காணித் துண்டுகளை வழங்குதல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.

நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, முப்படை தளபதிகள், பதில் கடமை பொலிஸ்மா அதிபர், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!