முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு, அடுத்த ஒரு வார காலத்தில் தீர்வு வழங்கப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று மாலை, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷார்ட் பதியுதீன், ஹாரீஸ், மஹ்ரூப், பைசல் காசீம், அலிசாஹீர் மௌலானா, தௌபீக், நசீர் ஆகியோர், அலரி மாளிகையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்.
நாளை அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளுமாறும், இன்று ஜனாதிபதிக்கு அமைச்சர் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது, தற்போது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கல்முனை தமிழ்ப் பிரதேச செயலக விவகாரம், வாழைச்சேனை பிரதேச சபை எல்லை நிர்ணய பிரச்சினை, தோப்பூர் பிரதேச சபை தரமுயர்த்தல் பிரச்சினை ஆகியவற்றில், முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலை வெளியிட்டனர்.
இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சு நடத்தி, உரிய தீர்வை வழங்குவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். (சி)