அமெரிக்கா மீது வாசுதேவ குற்றச்சாட்டு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, நாட்டில் குழப்பகரமான சூழ்நிலை உருவாகலாம் என, பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான, சோஷலிச மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று கொழும்பில் இடம்பெற்ற வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் குறித்த விசாரணை இப்போது ஒருமட்டத்திற்கு வந்துள்ளது. பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ்மா அதிபர் ஆகியோரது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காத்தான்குடியில் மோட்டார் சைக்கிள் வெடிப்பு ஒத்திகைக்குப் பின்னர் தகவல்களை வழங்கியதாக விசேட அதிரடிப்படை கூறுகிறது. வண்ணாத்திவில்லு பிரதேச சம்பவத்தின் பின்னர் பல தகவல்கள் வெளியாகின.

அதன் பின்னர் பல்வேறு இரகசியங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், பொலிஸ்மா அதிபரிடம் அவை குவிந்தன.
பொலிஸ்மா அதிபர் ஏன் செயற்படவில்லை என்பது பிரச்சினையாகியுள்ளது.

பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பொலிஸ்மா அதிபரை நீக்கி புதியவரை நியமிக்க வேண்டும் என்பதை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பல தடவைகளில் வலியுறுத்திவந்தார். ஆனால் அதனை செய்வதற்கு பிரதமரின் ஒத்துழைப்பு அவசியம். எனினும் பிரதமர் அதற்கான ஆதரவை வழங்கவில்லை. இறுதியில் பொலிஸ்மா அதிபர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார்.

நாட்டில், ஐ.எஸ் தீவிரவாதிகளின் குண்டு வெடிப்புக்களை மேற்கொள்ளச் செய்து, அதனூடாக இந்த நாட்டிற்குள் நுழைவதே அமெரிக்காவின் திட்ணமாக இருக்கிறது.

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் குறித்த, பொய்யான விசாரணைகளை நிறுத்துமாறு, கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையே கூறியிருக்கின்றார். ஏனென்றால், அமெரிக்காவின் உள்நாட்டு தலையீடுகள் இருக்கின்றன.
பொலிஸ் திணைக்களம், புலனாய்வுப்பிரிவு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றங்களிலும், அமெரிக்காவின் பிரிவினர் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு உதவிகளை, அமெரிக்கா வழங்கி வருகின்றது.

இப்படியிருக்கவே இந்த விசாரணைகள் பொய்யானவை என்று கர்தினால் கூறுகின்றார். எனவே இந்த அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, ஏதாவது ஒரு குழப்பத்தை இந்த நாட்டில் ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெறும்.

தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தி, குழப்பத்தை மேற்கொள்ளும் முயற்சி கர்தினாலினால் நிறுத்தப்பட்டது.

தற்போது புதிய வியூகங்கள் வகுக்கப்படலாம். கொலைகளும் மேற்கொள்ள முயற்சிக்கப்படலாம்.

சிலர் வெளிநாட்டு முகவர்கள் ஊடாக, இங்கு ஏற்படுத்த முயற்சிக்கும் குழப்பத்திற்கு, நாங்கள் பலியாகிவிடாமல் எச்சரிக்கை கொள்ள வேண்டும்’. என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!