கல்வித் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு அனுமதி அட்டை கிடைக்கவில்லை எனில், பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து, தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து, அனுமதி அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர்தரப்பரீட்சை மற்றும் 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில்களுக்கான அனுமதி அட்டைகள் தற்போது தபாலில் சேர்க்கப்பட்டுள்ளது.
அனுமதி அட்டைகளை விநியோகிப்பது தொடர்பாக தபால் மா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளளோம்.
அத்தோடு, தனியார் பரீட்சார்த்திகளுக்கு அனுமதி அட்டை கிடைக்கப்பெறுவதில் பிரச்சினைகள் ஏற்பட்டால் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பிரவேசித்து தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து அனுமதி அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒழுக்கவிதிகளை மீறும் பரீட்சார்த்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், கடந்த வருடத்தில் பரீட்சை விதிமுறகைளை மீறிய உயர்தரப் பரீட்சார்த்திகள் 229 பேரின் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதுடன், பணியாளர் சபை அங்கத்தவர்கள் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தரம் ஐந்து புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சை பணியாளர் சபை பயிற்றுவிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டடுள்ளன.
இம்முறை பரீட்சைக்காக 15 ஆயிரம் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதனடிப்படையில், இணைப்பு அதிகாரிகள் மூலம் கண்காணிப்புப் பணியாளர் சபையினருக்கு தெளிவுபடுத்தும் பணிகள் பரீட்சை ஆரம்பமாகும் தினத்திற்கு முன்னரே மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சையில், 3 இலட்சத்து 30 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. (சி)