ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புபட்டவர்களை கைது செய்ததையிட்டு பெருமைகொள்ளாமல், தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்றுவிட்டு சமூகத்தில் சுதந்திரமாக நடமாடுகின்ற தரப்பினர் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்தை ஆயுதங்கள் மூலமாக தோற்கடிப்பு செய்ததைப் போன்று அவர்களுக்குப் பின்னால் காணப்படுகின்ற அடிப்படைவாதத்தை முற்றாக நாட்டிலிருந்து துடைத்தெறியவும் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நேற்று பிற்பகல் புத்தளம் சிலாபம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தீவிரவாதிகளிடம் இணைந்து பயிற்சி பெற்று இன்று சமூகத்தில் சுதந்திரமாக நடமாடுகின்ற நபர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு மூன்று மாதங்களாகின்ற நிலையில் தீவிரவாதி சஹ்ரான் தலைமையிலான உறுப்பினர்களை கைது செய்யப்பட்டு அல்லது அழிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்கள் இந்த நாட்டில் பல்வேறு இடங்களில் பல பயிற்சி முகாம்களை நடத்தியுள்ளதோடு, ஆயிரக்கணக்கானவர்கள் பயிற்றப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலர் இன்னும் சமூகத்தில் சுதந்திரமாக இருக்கின்றார்கள் என்பதை நாங்கள் மறந்துவிடக்கூடாது.
அதேபோல இந்த தீவிரவாதக் குழுவினர் இந்த நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுகின்ற அநீதிகளைத் தட்டிக்கேட்பதற்காக எழுந்துவருகின்ற பிரிவினர் அல்லர்.
அவர்களுக்கு சர்வதேச ஐ.எஸ் தீவிரவாதக் குழுவின் கட்டளை வழங்கும் தலைமைத்துவம் ஒன்று இருக்கின்றது.
அதன் தலைவர் கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி காணொளியில் தோன்றி, ஸ்ரீலங்காவில் நடத்தப்பட்ட தாக்குதலானது சிலுவை யுத்தத்தின் ஒருபகுதி என்று கூறியுள்ளார்.
சிலுவைப்போர் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் ஜெருசலேமை விடுவிப்பதற்காக ஐரோப்பியப் படையினர், முஸ்லிம் தலைவர்கள் ஆகியோர் போராடினார்கள், இது வரை 4 சிலுவைப் போர்கள் இடம்பெற்றுள்ளன.
இதன் தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா மீதான தாக்குதலை ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைவர் தெளிவுபடுத்தினார்.
ஆனால் சிரியா, லிபியா, ஈராக், ஈரானில் இடம்பெற்று வருகின்ற சம்பவங்கள் கொச்சிக்கடை, சியோன் தேவாலயத்தின் மக்களுக்கு எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்பதை எம்மால் அறியமுடியவில்லை.
இருந்த போதிலும் அவர்களது படிப்பினை, அல்லாஹ் அன்றி ஏனைய தெய்வங்கள் பொய்யானவை அவற்றை அழித்துவிட வேண்டும் என்பதே.
அரசியல் அதிகாரம், புலனாய்வுத்துறை மற்றும் வழிநடத்துகின்ற பிரிவினருக்கு இடையே உள்ள இடைவெளி நீங்க வேண்டும் என்பதையும் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கிறேன். என குறிப்பிட்டார். (சி)