கன்னியா விவகாரம் : மேல்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட நான்கு கட்டளைகள்!

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான ஆதனங்களை தர்மகர்த்தா சபையே தொடர்ந்து நிர்வகிக்க வேண்டுமென திருகோணமலை மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அத்துடன், கன்னியா பிள்ளையார் ஆலயத்தில், விகாரை அமைக்கும் பணிக்கும் நீதிமன்றினால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயம், அதன் ஆதனங்களின் தர்மகர்த்தா சபையினால், திருகோணமலை மேல்நீதிமன்றத்தில் கடந்த 19ஆம் திகதி எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்றது.

மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் முன்னிலையாகினர்.

மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களை தொடர்ந்து, மேல்நீதிமன்றம் குறித்த வழக்கில் சில இடைக்கால கட்டளைகளை வழங்கியுள்ளது.

இதன்படி, கன்னியா பிள்ளையார் ஆலயத்தை இடித்து விட்டு அங்கு அமைக்கப்பட்டு வரும் விகாரையின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் ஆலயம், மாரியம்மன் ஆலயம், மற்றும் அதற்கு சொந்தமான வழிபாட்டிடங்களிற்கு பக்தர்கள் சென்று வருவதையும், சமய அனுட்டானங்கள் செய்வதையும் யாரும் தடை செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டது.

விகாரை கட்டுவதற்கான தடை, பற்றுச்சீட்டு விற்பதற்கான தடை, இந்து பக்தர்கள் சமய கடமைகள் செய்வதை எவரும் தடுக்க கூடாது.

ஆலய நிர்வாகம் கோவிலை நிர்வாகவும் செய்வதை யாரும் தடுக்க கூடாது எனும் நான்கு கட்டளைகள் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம், மாரியம்மன் ஆலயம், மற்றும் அதற்கு சொந்தமான ஏனைய வழிபாட்டிடங்களின் பரிபாலனத்தை அதன் தர்மகர்த்தா சபை தொடர்ந்து மேற்கொள்ளவும் திருகோணமலை மேல்நீதிமன்றம் அனுமதியளித்தது.

தொடர்ந்து குறித்த வழக்கு ஓகஸ்ட் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!