உயிர்த்த ஞாயிறு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 26 கோடி 50 இலட்சம் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த 201 பேருடைய குடும்பங்களுக்கு இதுவரை 20 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, குண்டுத் தாக்குதல் சம்பவங்களில் 503 பேர் காயங்களுக்குள்ளானதாக அறிவித்துள்ள பிரதமர் அலுவலகம் இவர்களில் இதுவரை 442 பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட 43 வெளிநாட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இதுவரையில் இழப்பீட்டை பெற்றுக்கொள்ளவில்லை என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இத் தாக்குதல் சம்பவத்தினால் சேதமடைந்த தேவாலயங்களை மீள புனரமைப்பதற்காக இரண்டு கோடி 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ள அதேவேளை, நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம் புனரமைப்பின் பின்னர் நேற்றுத் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (மு)