பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை ஓகஸ்ட்டில் சமர்ப்பிப்பு

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 23ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவுக்குழுவின் உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்போது, குண்டுத் தாக்குதல் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில், இதுவரை பெற்றுக்கொண்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், அறிக்கையைத் தயாரிக்கும் நடவடிக்கைகைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் சாட்சியமளிக்கவுள்ளனர்.

அத்துடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பொலிஸ் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜயசுந்தர மற்றும் குறித்த பிரிவின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் தரங்க பதிரன ஆகியோரும் தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்கவுள்ளனர்.

மேலும், அரச புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவும் தெரிவுக்குழுவில் வாக்குமூலம் வழங்கவுள்ளார்.

அவர் வாக்குமூலமளிக்கும் சந்தர்ப்பங்களில், ஊடகங்களுக்கு அனுமதியளிக்காதிருப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு குறிப்பிட்டுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!