ஹட்டனில் ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களையும், இரண்டு இலட்சம் ரூபாய் பணத்தையும் திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா ஹட்டன் பகுதியில் வீடு ஒன்றில் ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் இரண்டு இலட்சம் ரூபாய் பணத்தை திருடிய நபர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது வீட்டில் நகைகள் மற்றும் ஒருதொகை பணம் திருடப்பட்டுள்ளதாகவும், நபர் ஒருவர் தனது உடமைகளை திருடும் காட்சி வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வீட்டு உரிமையாளர் ஒருவர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் சீ.சீ.டி.வி காணொளிக் காட்சியின் உதவியுடன், விசாரணைகளை முன்னெடுத்த ஹட்டன் பொலிஸார், சந்தேகத்தின் அடிப்படையில் மஸ்கெலியா அப்புகஸ்தலாவ நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், முறைப்பாட்டாளர் வீட்டில் திருடப்பட்ட இரண்டு இலட்சம் ரூபா பணம் மற்றும் ஆறு இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களையும், சந்தேக நபரின் வீட்டில் இருந்து ஹட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர் 31 வயது நிரம்பியவர் எனவும், நோர்வூட், மஸ்கெலிய போன்ற பிரதேசங்களில் இதற்கு முன்னர் திருட்டுச் சம்பங்களில் ஈடுபட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபரை ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகயை ஹட்டன் பொலிஸார் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி)