கன்னியா போராட்டத்தின்போது தென் கயிலை ஆதீனம் தாக்கப்பட்ட சம்வத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை இன்று வெளியிட்டுள்ள தமது கண்டன அறிக்கயில் தெரிவித்துள்ளனர்.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
கன்னியா போராட்டத்தின்போது ஆதீன சுவாமிகள் மீது சுடு நீர் வீசி தாக்குதல் நடாத்திய சம்பவமானது கடும் கண்டனத்திற்குரியது.
இந்து சமயத்திலே உயர் நிலையில் இருக்கும் எமது சுவாமி மீது நடாத்தப்பட்ட இச் சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோடு எமது மதத்தின் தலைவர்களுகளுக்குரிய கௌரவத்தினையும் உரிய முறையில் வழங்க வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
சாத்வீகமான முறையில் கன்னியாவின் தமிழர் பூர்வீகத்தை பாதுகாக்கும் போராட்டத்தை வழி நடத்திய ஆன்மீக தலைவர்களில் ஒருவராகிய வணக்கத்துக்குரிய தென் கயிலை ஆதீனத்தின் மீது கூடு நீர் வீச்சினை மேற்கொண்டவர்கள் மீது இது வரை எந்த நடவடிக்கையுமில்லை என நாம் அறிகின்றோம்.
கன்னியா போராட்டத்தை அகிம்சை முறையில் மேற்கொண்ட மக்களை அடக்க முற்பட்டு வருகின்றனர்.
அனைவரும் ஒன்றிணைந்து எமது சமய தலைவர்களில் ஒருவரும் தமிழர்களின் பூர்வீக கன்னியாவை மீட்கும் போராட்டத்தின் முதன்மை வழி காட்டியுமான தென் கயிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளாருக்கு இழைக்கப்பட்ட கொடுஞ் செயலுக்கு நீதி வேண்டும் என மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையினர் தமது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். (நி)