அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, சம்மாந்துறை 12 கருவாட்டுக்கல் எனும் பிரதேசத்தில், தனியாருக்குச் சொந்தமான காணியில், ஆயுதம் தாங்கிய இரு நபர்கள், ரி 56 ரக துப்பாக்கி எடுத்து, தன்னைச் சுட முற்பட்டதாக, காணி உரிமையாளர் தெரிவித்ததை அடுத்து, அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
இன்று காலை காணி உரிமையாளர் காணிக்கு சென்ற நிலையில், அங்கு உலாவிக் கொண்டிருந்த நிலையில், இருவர் கையில் துப்பாக்கியுடன் காணப்பட்டுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, காணி உரிமையாளர், தான் அவர்களை நோக்கி சென்றதுடன், துப்பாக்கி ஏந்தியவர்கள் தன்னைச் சுட முயன்று அச்சுறுத்தியதாகவும், தான் அதிலிருந்து தப்பியதாகவும் குறிப்பிட்டார். இந்த நிலையில், இராணுவத்தினரும் அவ்விடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டதுடன், அவ்விடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட ஆயுததாரிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வருகின்றது.
தொடர்ந்து, பெருமளவு இராணுவத்தினர் அப்பகுதிக்கு அழைக்கப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், ஆயுதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனவும், சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். (சி)