உரிமைப் பிரச்சினைகளில் தலையிடேன்-மனோ கணேசன்

அபிவிருத்தி, வாழ்வாதாரம், அமைச்சரவை பத்திரங்கள் தவிர, வடகிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன் என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடகிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன் எனவும், உரிமை கோரிக்கைகள் தொடர்பில் தனது தலையீட்டை வடகிழக்கின் மக்கள் பிரதிநிதிகள் எழுத்து மூலமாக கோருவார்களாயின் அவை பற்றி பரிசீலிப்பேன் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை அமைச்சரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ளது.

குறித்த அறிக்கையில், நேற்று ஜனாதிபதியுடன் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய சில கட்சிகளின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், கலந்துகொள்ளாமையை பெரிது படுத்த வேண்டாம். இது தொடர்பில் எனக்கு எவர் மீதும் கோபம் கிடையாது. அனைவராலும் கலந்துக்கொள்ள முடியாமை பற்றி நான் எனது கவலையை மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன்.

உண்மையில் 11.30 க்கு ஆரம்பமாக வேண்டிய கூட்டத்தை, அரை மணித்தியாலம் தாமதித்து 12 மணிக்கே ஆரம்பித்தோம். எனது வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி தமது அறையில் காத்திருந்தார். ஜனாதிபதி செயலகத்தில் எம்பீக்கள் வருவார்கள் என நாம் காத்திருந்தோம். என்னுடன், அமைச்சர் பழனி திகாம்பரம், எம்பீக்கள் திலகராஜ், வேலுகுமார், வியாழேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

குறைந்தபட்சமாக இன்னொரு சகோதர சிறுபான்மை இனமான முஸ்லிம் மக்களின் பொது பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் எம்பீக்கள் ஒன்று கூடுவதை நினைத்து நாம் மகிழ்வோம். ஜனாதிபதியுடன் நடைபெற்ற கூட்டம், அவசர பிரச்சினை தொடர்பில் நடைபெற்ற அவசர கூட்டம். அனைவருக்கும் ஏதோ ஒரு முறையில் அவசர அழைப்பு தகவல் அனுப்பப்பட்டது, பரிமாறப்பட்டது, ஊடகங்களிலும் கூறப்பட்டது என எம்பீக்கள் ஸ்ரீதரன், சரவணபவன், சித்தார்த்தன், டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொள்ள இயலாமை தொடர்பில் தகவல் தெரிவித்திருந்தார்கள்.

அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் எம்பீக்கள் அரவிந்த குமார், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் நாட்டில் இல்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.
எம்பி முத்து சிவலிங்கம் சுகவீனம் என கூறப்பட்டது. எம்பி சுவாமிநாதனை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஏனையோர் பணிப்பளு காரணமாக கலந்துக்கொள்ளவில்லை என எண்ணுகிறேன்.

எது எப்படி இருந்தாலும், எனது அமைச்சின், தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார பணிகள் தொடர்பான அபிவிருத்தி, வாழ்வாதாரம், அமைச்சரவை பத்திரங்கள் ஆகிய மட்டங்களில் எனது பணி வடகிழக்கில் தொடரும். இவை பற்றி நானே முடிவு செய்வேன். இவை தவிர்ந்த வடகிழக்கின் உரிமை பிரச்சினைகள் தொடர்பில், வடகிழக்கின் மக்கள் பிரதிநிதிகள் எழுத்து மூலமான கோரிக்கைகளை முன் வைப்பார்கள் எனில் அவற்றை நான் பரிசீலிப்பேன்.

மூன்று வருடங்களுக்கு முன்னேரே, முதற்கட்டமாக, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி தமிழ் பாராளுமன்ற ஒன்றியம் ஒன்றை அமைக்க வேண்டும், பின் அது தமிழ் பேசும் பாராளுமன்ற ஒன்றியமாக விரிவு படுத்தப்பட்ட வேண்டும் என நான் பகிரங்கமாக யோசனை கூறி இருந்தேன். ந்த ஒன்றியம் கட்சி, தேர்தல், பிரதேச பேதங்களுக்கு அப்பால் எமது பொதுவான பிரச்சினைகளை அரசாங்கம், சிங்கள கட்சிகள், பௌத்த தலைமைகள், சர்வதேச சமூகம் மத்தியில் கொண்டு செல்ல வேண்டுமெனவும் கூறியிருந்தேன். புதிய அரசியலமைப்பு என்பது நடைமுறையில் வராது. அதற்கான அரசியல் திடம் இங்கே இல்லை என இந்த அரசாங்கத்தில் இருந்துக்கொண்டே கூறியிருந்தேன். இவை இன்று உண்மைகளாகி விட்டன.

எனினும் இவற்றுக்கு இன்று காலம் கடந்து விட்டது. விரைவில், ஏதாவது அதிசயம் நடந்து, தந்தை செல்வா சொன்னது போன்று கடவுள் வந்து நம்மை காப்பாற்றுவார் என நம்புகிறேன்.. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!