உலக வங்கி தெற்காசிய வலய உப தலைவர் – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கு வழங்கும் உதவிகளை, 3 புதிய செயற்திட்டங்களின் கீழ் மேலும் அதிகரிப்பதாக, உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர் ஹார்ட்விங் சேபர் தெரிவித்துள்ளார்.

இன்று, ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்த போது இவ்வாறு குறிப்பிட்டார்.

திடீர் காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுத்துள்ள விவசாயத்துறை மற்றும் நீர்ப்பாசனத்துறை, மீள்பிறப்பாக்க மின் சக்தி, கிராமிய பிரதேசங்களில் குளங்களை புனரமைப்பு செய்வதற்கான உதவி ஆகியன, இந்த புதிய செயற்திட்டங்களில் உள்ளடங்குகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால், பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட அழுத்தங்கள் குறித்து கருத்துத்தெரிவித்த, உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர், வளமான பொருளாதார அடிப்படையில் அமைந்துள்ள இலங்கைக்கு, தொடர்ச்சியாக சர்வதேச கடன் உதவியை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில், வரவு செலவுத்திட்ட இடைவெளியை குறைப்பதற்காக, உலக வங்கியின் நிதியுதவியை பெற்றுத்தருவதாக குறிப்பிட்டார்.

நீண்ட காலமாக இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பிற்காக, இதன் போது உலக வங்கிக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் முகங்கொடுத்த சவால்களை வெற்றி கொள்வதற்கு, உலக வங்கியினால் வழங்கப்பட்ட நிதியுதவியை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

இந்த துன்பியல் நிகழ்விற்கு பின்னர், இலங்கை துரிதமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த, உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர், அனைத்து கஷ்டமான சந்தர்ப்பங்களின் போதும், சர்வதேச சமூகம் இலங்கையுடன் இருப்பதாக குறிப்பிட்டார்.

உலக வங்கியின் வலய சிரேஷ்ட முகாமையாளர்களின் மாநாட்டுக்கு தலைமை தாங்குவதற்காக, இலங்கைக்கு வருகை தந்துள்ள, உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர், உலக வங்கி தனது வருடாந்த கூட்டத்தொடரை நடாத்துவதற்கு இலங்கையை தெரிவு செய்திருப்பது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் எழுந்திருப்பதற்கு இலங்கை மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு உதவுவதற்காகவே ஆகும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கை தற்போது உயர் மத்திய வருமானம் பெறும் நாடாக மாறியிருப்பதையிட்டு மகிழ்ச்சி தெரிவித்த, உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர், சவால்களுக்கு மத்தியில் சளைக்காமல் எழுந்திருப்பது, இலங்கையிடமுள்ள விசேட பண்பாகும் என்பதற்கு இது நல்ல சான்றாகும் என்றும் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில், உலக வங்கியின் வதிவிட பணிப்பாளர், சர்வதேச நிதி ஒத்துழைப்புக்கான வதிவிட முகாமையாளர் அமீனா ஆரிப், சிரேஷ்ட செயற்படுத்தல் அதிகாரி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் எசல வீரக்கோன் ஆகியோரும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!