மலயகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை – 5 வான் கதவுகள் திறப்பு

மலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையை தொடர்ந்து, நுவரெலியா கொட்டகலை பகுதியில் கன மழை பெய்து வருகிறது.

இந்த மழை காரணமாக, கொட்டகலை மேபீல்ட் சாமஸ் பகுதியில், தொடர் குடியிருப்பு ஒன்றில் உள்ள 6 வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

அத்துடன், அப்பகுதியில் உள்ள பாடசாலை, கொழுந்து மடுவம் ஆகியவற்றுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதேவேளை, கொட்டகலை ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக, லொக்கீல் பகுதியில் உள்ள 30 வீடுகளுக்கு வெள்ள நீர் புகுந்துள்ளது, மேலும், கொட்டகலை வூட்டன் பகுதியில் 10 கடைகளுக்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது.

வட்டவளை பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக, பல குடும்பங்களை, வட்டவளை தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மலைகயத்தில் நேற்று இரவு முதல், பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது, தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக, பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.

மழையுடன் கடும் குளிரும் நிலவுவதனால், பல்வேறு தொழில் துறைகள் முடங்கி போய்யுள்ளன, தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக, பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.

அத்துடன், ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா வீதிகளில், பல இடங்களில் மண்சரிவு அபாயம் நிலவுவதனால், இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நீரேந்தும் பிரதேசங்களில் கனத்த மழை பெய்து வருவதனால், லக்ஸபான நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 6 அங்குலம் வரை திறக்கப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால், அதிகமான தொழிலாளர்கள், இன்று கொழுந்து பறிப்பதற்கு சமூகம் தரவில்லை என்றும், இதனால் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தோட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

காலை முதல் இடை விடாது மழை பெய்து வருவதனால், கால்நடை உற்பத்தியாளர்கள் தங்களது கால் நடைகளுக்கு தேவையான புற்களை அறுக்க முடியாது சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.
இதனால், இன்று மதியம் முதல் 5 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள், அவதானத்துடன் செயற்பட வேண்டும் என, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக, சென் கிளயார் நீர் வீழ்ச்சியின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!