ஒத்திவைக்கப்பட்ட பசிலின் வழக்கு

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்  ராஜபக்ஷ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் 16ம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க முன்னிலையில் இன்று (18) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது திவிநெகும திணைக்களத்தின் சிறிய நிதி வங்கிப் பிரிவின் முகாமையாளர் நிலந்த மீவெடும சாட்சியமளித்துள்ளார்.

திவிநெகும பயனாளர்களுக்கு வீட்டு உதவி வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்ட நிதி திவிநெகும வங்கி கட்டமைப்பில் இருந்த நிதி என்று அவர் சாட்சியமளித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடு வழங்குவதற்காக 2992 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதன் மூலம் அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அந்த அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க, அந்த திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!