உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றோடு வெளியேறியதை அடுத்து தலைமை தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து இன்சமாம் உல் ஹக் விலகியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான இன்சமாம் உல் ஹக், கடந்த  2016 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவராக பதவியேற்றார்.

உலகக் கிண்ணத்திற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட பின், போட்டி தொடங்குவதற்கு முன் அணியில் சில மாற்றங்களை செய்தார். இதனால் அவர் மீது கடும் விமர்சனம் எழும்பியது. இந்நிலையில் உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அத்துடன் அந்த அணி ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

ஏமாற்றத்தோடு பாகிஸ்தான் அணி சொந்த நாடு திரும்பிய நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தேர்வுக்குழு தலைவராக கடமையாற்றிய இன்சமாம் உல் ஹக் இன்று ஊடகங்களை சந்தித்து தான் தேர்வுக் குழுத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இன்சமாம் உல் ஹக்கின் பதவிக்காலம் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை  உள்ள நிலையில் அவர் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில்,

‘‘கிரிக்கெட் என்னுடைய பேரார்வம். ஆனால், தேர்வுக்குழு தொடர்பான பணியில் ஒரு அங்கமாக இருக்க விரும்பவில்லை. துரதிஷ்டவசமாக தொடக்க போட்டியில் நாங்கள் தோல்வியடைந்து விட்டோம். அது கடைசி கட்ட போட்டிகளின்போது ரன்ரேட்டை சீராக கொண்டு வர தடையாக அமைந்து விட்டது’’ என்றார்.

இவர் தேர்வு செய்த அணிதான் 2017 இல் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.(சே)