கன்னியா வெந்நீருற்று பௌத்த மயமாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் காணப்பட்ட இடத்தில், பௌத்த விகாரை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
திருகோணமலையில் தமிழ் மக்களின் வரலாற்று அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் கன்னிய வெந்நீருற்று பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டு, அவ்விடத்தை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
வடக்கு கிழக்கு சபை பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்போரட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், தென்கையிலை ஆதீனம், சின்மயா மிசன் சுவாமிகள் மற்றும் தமிழ் அரசியல் கட்சியினர், இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, கன்னியா போராட்டத்திற்கு நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, போராட்டம் மேற்கொள்ளப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுடன், போராட்டகாரர்களை கன்னியா வெந்நீருற்று அமைந்துள்ள பகுதிக்கு செல்வதற்கு பொலிஸாரினால் தடையும் போடப்பட்டது.
இந்நிலையிலும், போராட்டம் சாத்வீகமான முறையில், சிவபுராணம் இசைத்து, பொலிஸாரால் போடப்பட்ட தடைக்கு முன்பாக அமர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, போராட்டத்தில் பங்குகொண்டிருந்த கன்னியா வெந்நீருற்று கிணறுகள் அமைந்துள்ள இடம் மற்றும் வெந்நீருற்று பிள்ளையார் ஆலய காணியின் உரிமையாளரான கோகிலரமணி அம்மையார் மற்றும், தென் கையிலை ஆதினமும் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு, போராட்டத்தை கைவிடுமாறு வேண்டப்பட்ட சமயம், கன்னியா வெந்நீருற்று வீதியில் உள்ள தேநீர்ச் சாலையில் நின்றிருந்த பெரும்பான்மையினத்தவர்களால் சுடுதண்ணீர் ஊற்றி அவமதிக்கப்பட்டதுடன், அநாகரிக வார்த்தைகளும் அவர்களை நோக்கி பேசப்பட்டன.
இதனால், போராட்டக்காரர்கள் கடும் ஆத்திரமடைந்து பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டதுடன், சுடுதண்ணீர் ஊற்றி அவமதித்தவர்களை உடனே கைது செய்யுமாறும் கடுமையாக வேண்டிக்கொண்டனர்.
போராட்டாக்காரர்களின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தவதாக அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டபோதிலும், அவர்களின் கூற்றில் நம்பிக்கையடையாது பொலிஸாருடன் கடும் வாக்குவாதமும் இடம்பெற்றது.
இதேவேளை, அங்கு நிலவிய பதற்ற நிலமைகளையடுத்து, இராணுவத்தினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அழைக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
குறித்த போராட்டத்தில் பங்குகொள்வதற்காக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இருந்து சென்ற பொதுமக்கள் பயணித்த பேருந்துகள் இராணுவத்தினரால் மறிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பொதுமக்களும் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் என தகவல்களும் வெளியாகியிருந்தன.
கன்னியா வெந்நீருற்று பகுதி பௌத்தமயமாக்கலுக்குள்ளாகும் செயற்பாடுகள் அதிகரித்துவரும் நிலையில், வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களிடமிருந்து இதற்கு எதிர்ப்புக்கள் அதிகரித்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.