இலங்கையில், சுற்றுலாத்துறையின் சொர்க்க புரியாகத் திகழும், அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் அறுகம்பை கடற்கரைப் பிரதேசம், மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் களைகட்டத் தொடங்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற, தற்கொலை குண்டுத் தாக்குதலின் பின்னர், இலங்கையின் சுற்றுலாத்துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்து.
இதனால் பிரசித்தி பெற்ற சுற்றுலாப் பிரதேசங்களில் ஒன்றான அறுகம்பை பிரதேசம் ஸ்தம்பிதமான நிலையில் காணப்பட்டது.
தற்கொலை தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று, இரண்டு மாதங்களைக் கடந்த நிலையில், மீண்டும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
அதனடிப்படையில், தற்போது அறுகம்பை பிரதேசத்தை நோக்கி, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை, நாட்டின் சுற்றுலாத்துறையின் வருமானத்தை அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தின் அறுகம்பை குடாக்கரையானது, உலக புகழ்பெற்ற கடலலை நீர்ச்சறுக்கல் விளையாட்டுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஓரிடமாகவும், இது உலகில் 10 ஆவது இடத்திற்குள் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் இதனுடன் அண்டிய மற்றுமொரு சுற்றுலாப் பிரதேசமாக, குமுண வன விலங்கு சாரணாலயம் அமைந்துள்ளது.
அத்துடன், சுற்றுலாத்துறையினரை ஈர்க்கும் வகையிலான, கலாசார பாரம்பரியங்கள், உணவு உற்பத்திகள், காடுகள், மலைகள், குளங்கள், ஏரிகள், களப்புகள், கடல்கள் என அத்தனை இயற்கை வனங்களும் இப்பிரதேசங்களில் நிறைந்து காணப்படுவது, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளன.
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளிடம் வினவிய போது, இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால், நாட்டின் பாதுகாப்பு விரைவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால், தமது பயணங்களை அச்சமின்றி மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இயற்கை எழில் மிகு, வளங்கள் நிறைந்த நாடாக இலங்கை காணப்படுவதாகவும், இங்குள்ள மக்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் அன்பாகப் பழகுவதாகவும், இங்கு வாழ்க்கைச் செலவு மிகக் குறைவாகக் காணப்படுவதாகவும், சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர். (சி)