எதிர்வரும் ஐந்து மாதங்களில், புதியதொரு அரசாங்கத்தை உருவாக்கும் வாய்ப்பு நாட்டு மக்களுக்கு கிடைக்கப் பெறுவதுடன், இதன் போது, தூய்மையான, மனிதநேயம் மிக்க, நாட்டை நேசிக்கும், ஊழல், மோசடியற்ற உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட, மனிதநேய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்காக, மக்கள் தமது வாக்குப் பலத்தை பிரயோகிக்க வேண்டும் என, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று, நுவரெலியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சகல வசதிகளையும் கொண்ட புதிய மாவட்ட மருத்துவமனையை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.
வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதார கட்டமைப்பையும், ஊழல், மோசடிகள் மிக்க தூய்மையற்ற அரசியலைக் கொண்ட இந்த நாட்டினைக் கட்டியெழுப்புவதற்கான ஒரேயொரு மார்க்கம், உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட அரசாங்கம் ஒன்றினைத் தேர்ந்தெடுப்பதாகும். அதற்கான பொறுப்பு நாட்டு மக்களிடமே காணப்படுகின்றது.
நாட்டை நேசிக்கும் உண்மையான அரசியல்வாதிகள், மக்களின் பிரச்சினைகளை உரியவாறு இனங்கண்டு, அவற்றை தீர்த்து வைப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள்.
அபிவிருத்தியின் பெரும் பங்காளர்களான சுமார் 16 இலட்சம் அளவிலான அரச சேவையாளர்களும், நாட்டிலுள்ள புத்திஜீவிகளும் தமது கடமைகளை சரிவர நிறைவேற்றுவார்களாயின், நாட்டில் அபிவிருத்தி என்பது ஒரு சவாலான விடயமாக அமையாது.
பெருந்தோட்ட மக்களுக்காக, முன்னொருபோதும் நிறைவேற்றப்படாத வேலைத்திட்டங்கள் கடந்த ஐந்து வருடங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
மக்களுக்கான இலவச மருத்துவம், கல்வி மற்றும் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பல விரிவான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன, நாட்டை சீரழிப்பதற்கான இலகுவான மார்க்கம் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலாகும்.
அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் காரணமாக, நாட்டிற்கு நன்மைபயக்கும் விடயங்களுக்காக பாரிய முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவற்றின் முழுமையாக பலன்களை பெற்றுக்கொள்வது மிக சிரமமாகும்.
நாட்டிற்கு நன்மை பயக்கும் விடயங்கள் தொடர்பில், அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால், உண்மையான மனித நேயத்துடன் செயற்பட வேண்டியது முக்கியம். என குறிப்பிட்டுள்ளார். (சி)