இரண்டு வருடங்களுக்குள் அரசியல் தீர்வு : ரணில்

இன்னும் 2 அல்லது 3 வருடத்திற்குள், அரசியல் தீர்வு கிடைக்கும் என உறுதியாக கூற விரும்புகின்றேன் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று, யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது, இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வை வழங்குவது தொடர்பில் நான் உட்பட எனது கட்சியினரும் கரிசனை கொண்டுள்ளோம்,ஆனால் துரதிஸ்டவசமாக அது தடைப்பட்டுள்ளது, ஏனெனில் எமக்கு பாராளுமன்றில் பெரும்பான்மை இல்லை. எமக்கு மட்டுமல்ல எவருக்கும் பாராளுமன்றில் பெரும்பான்மை இல்லை.

நானும், எனது கட்சியினரும் தீர்வை வழங்குவதற்கு உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றோம்.
நாம் அது தொடர்பில் பேசி வருகின்றோம்.

பகிரப்பட வேண்டிய அதிகாரங்கள், உருவாக்கப்பட வேண்டிய சட்டக் கோவைகள் குறித்துப் பேசி வருகின்றோம்.
நாம் கொண்டுவரும் அரசியல் தீர்வானது சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒன்றாக இருப்பது குறித்தும் நாம் பரிசீலித்து வருகின்றோம்,அதைப்போல அதனை ஏனையவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எனினும் இவற்றை எதிர்பார்த்து எதிர்வரும் இரண்டு அல்லது 3 வருடத்திற்குள் முடிவொன்று கிடைக்கும் என்று நம்புகின்றோம்.

அதிகாரங்களை, உள்ளுராட்சி மன்றங்கள், மாகாணங்கள் மற்றும் மத்திக்குள் பகிரப்படுவது தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றோம்,எமக்குள்ள அனுபவங்கள் இந்த விடயத்திற்குப் பெரிதும் உதவுகின்றன.

தற்போது நாம் நல்லிணக்கத்தை உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றோம்,அத்தோடுதான் நாம் இந்த அரசியல் தீர்வு விடயத்தையும் பார்க்கின்றோம்.

நான் மகிழச்சியாகவும், உறுதியாகவும் கூறுகின்றேன், இந்தத் தீர்வு விடயத்தில் நாம் மிகவும் அருகில் நெருங்கி விட்டோம்.

இன்னும் 2 அல்லது 3 வருடத்திற்குள் தீர்வு கிடைக்கும் என, நான் உறுதியாக உங்களிடம் கூற விரும்புகின்றேன்.

நான் கல்வி கற்கும் காலத்திலும், அரசியலுக்கு வந்து கல்வி அமைச்சராக இருந்த காலத்திலும், வடக்கு மாகாணமே கல்வியில் சிறந்து விளங்கியது.

ஆனால், வடக்கில் சுனாமி மற்றும் யுத்தம் காரணமாக கல்வி நிலையில் வீழ்ச்சி ஏற்பட்டது.

வடக்கின் கல்வித்துறையை, முன்னைய காலத்தைப்போல கட்டி எழுப்ப வேண்டும்.

இதற்காக நாம் வடக்கிலிருந்து முதல் முறையாக கல்வி இராஜாங்க அமைச்சரை நியமித்துள்ளோம்.

அத்துடன் அனைத்து பாடசாலைகளுக்கும் நீர் மற்றும் மின்சார வசதிகள் உட்பட்ட உட்கட்டுமாண வசதிகளையும் நாம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

மேலும் பாடசாலைகளின் கல்வித் தரத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் ஸ்மாட் வகுப்பறைகளையும் நிர்மாணித்து வழங்கும் அதேவேளை, பயிற்றப்பட்ட ஆசிரியர்களையும் பாடசாலைகளுக்கென நியமித்துள்ளோம்.

இதேவேளை, வடக்கின் கல்வித்துறையை தொடர்ந்து 5 வருடங்களுக்கு மேலும் கட்டி எழுப்புவது தொடர்பில் துறைசார்ந்த அதிகாரிகள், கல்வி இராஜாங்க அமைச்சருடன் இணைந்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!